வேலூர் சிறையில் ராஜீவ் கொலை கைதி முருகன் மவுன விரதம் இருக்கிறார். அடுத்த வாரம் முதல் அவர் தியானம் இருக்க உள்ளதாகவும், அதற்கு சிறை அதிகாரிகள் அனுமதி அளிக்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதே வழக்கில் நளினி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் உள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை அவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் சந்தித்து வருகின்றனர். சிறையில் உள்ள முருகன் அதீத கடவுள் நம்பிக்கை கொண்டவராக உள்ளார். இதற்கு முன் சாந்தன்தான் தாடியுடன் தியானத்தில் ஈடுபட்டு வந்தார்.

ஆனால் தற்போது முருகனும் மிகுந்த பக்தி மயமாக மாறிவிட்டார். எப்போதும் காவி உடை, ஆஞ்சநேயர், சிவன் கோயில்களில் தியானம் என்று தனது நடவடிக்கைகளை மாற்றிக்கொண்ட அவர் பேசுவதையே நிறுத்திக் கொண்டுள்ளார்.

 கடந்த வாரம் முருகன், சிறை வாழ்க்கை வெறுத்துவிட்டதாகவும், ஜீவசமாதி அடைவதற்கு சிறைத்துறை அதிகாரிகள் அனுமதி அளிக்க வேண்டும் என மனு அளித்தார்.

இந்நிலையில் முருகன், ஓரிரு நாட்களில் தியானம் செய்ய உள்ளதாகவும், அப்போது அவரை ஜீவசமாதியாக்க வேண்டும் என மீண்டும் ஒரு கடிதத்தை சிறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார். இதை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுதொடர்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, நீதிபதியின் அறிவுரைப்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.