Rajiv Gandhi murder case convict murdered on Murugan Cell phone in jail

வேலூர்

சிறையில் செல்போன்களை தனது அறையில் மறைத்துவைத்து இருந்ததாக பதியப்பட்ட வழக்கு தொடர்பாக ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன் எனக்காக நானே வாதாடுகிறேன் என்று கேட்டு மனு அளித்ததற்கான விசாரணை வேலூர் நீதிமன்றத்தில் நாளை நடக்கிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி முருகன் அடைக்கப்பட்டுள்ள அறையில் சிறை காவலர்கள் சோதனை மேற்கொண்டபோது அவரது அறையில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த இரண்டு செல்போன்களை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.

மேலும், அங்கிருந்து இரண்டு சிம்கார்டுகளும், ஒரு சார்ஜரும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்த புகாரின்பேரில் பாகாயம் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து முருகனும், அவரது மனைவி நளினியும் சந்திக்கவும், உறவினர்கள் சந்தித்து பேசவும் தடை விதிக்கப்பட்டது. மேலும், முருகனை பார்ப்பதற்காக அவருடைய தாய் சோமணியம்மாள் இலங்கையில் இருந்து வேலூர் வந்தார். அவருக்கும், முருகனை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை.

இந்த நிலையில் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைத் தொடர்பாக, வேலூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்ற எண்-1-ல் கடந்த 18-ஆம் தேதி மாஜிஸ்திரேட்டு அலிசியா முன்னிலையில் முருகன் சமர்ப்பிக்கப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணையை 22-ஆம் தேதிக்கு மாஜிஸ்திரேட்டு ஒத்திவைத்தார். அதன்படி, முருகனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நேற்று துப்பாக்கி ஏந்திய காவலாளர்களின் பலத்த காவலுடன் வேலூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.

பகல் 12-45 மணிக்கு மாஜிஸ்திரேட்டு அலிசியா முன்பு முருகன் சமர்ப்பிக்கப்பட்டபோது அவர் மாஜிஸ்திரேட்டு அலிசியாவிடம் 4 கோரிக்கை மனுக்களை அளித்தார்.

அந்த மனுக்களில் கூறியிருப்பது:

“கடந்த 18-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை நகல் என்று சொல்லி 20 பக்க நகல்கள் தரப்பட்டன. அது ஆவணங்களில் இருந்து எடுக்கப்பட்ட நகல்களாக தோன்றவில்லை.

எந்த ஆவணத்திலும் குறிப்பிட்ட காவல் நிலைய முத்திரையோ, சிறை நிர்வாக முத்திரையோ, நீதிமன்ற முத்திரையோ இல்லை. அதனால் இந்த வழக்குத் தொடர்பாக புலனாய்வு காவலாளர்கள் அரசு தரப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள ஆவணங்கள், அறிக்கைகள், வாக்குமூலங்கள் ஆகியவற்றின் நகல்களை தந்து உதவிட வேண்டும்.

மேலும் இந்த வழக்கில் தற்போது நீதிமன்ற விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் திறந்த நீதிமன்ற விசாரணையாக நடத்த வேண்டும்.

இதுவரை இந்த வழக்கில் அரசு தரப்பு செய்திகள் மட்டுமே செய்திகளாக வந்துள்ளன. எனது தரப்பு உண்மைகளும் செய்திகளாக வெளிவர அனுமதி அளித்தால் மட்டுமே சமநீதி ஏற்படவாய்ப்பு உள்ளது. ஆகவே, வழக்கு விசாரணை விபரங்களை குறிப்பெடுக்க யாரும் தடுத்திடாத வகையில் ஆணையிட வேண்டும்.

இந்த வழக்கின் முடிவு எனது 26 வருட சிறை வாழ்வின் விடுதலைக்கு தடையாக இருக்கும். இந்த வழக்கில் எனக்காக நானே குறிப்புகளே தயார் செய்து கொண்டு வாதாட உள்ளேன்.

மேலும், அந்த மனுக்களில் சம்பவம் நடந்த நாளில் சிறையில் பணியில் இருந்தவர்கள் விவரங்களும், தகவல்களும், ஆவண நகல்களையும் உரிய அத்தாட்சி சான்றுகளுடன் நீதிமன்றம் வழியாக சிறை கண்காணிப்பாளர் வழங்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்களைப் பெற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட்டு, தங்களுக்கு தேவையான தகவல்களை தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பெற வேண்டும். எனவே, இந்த மனுக்களை நிராகரிக்கிறேன் என்றார்.

அதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை மாஜிஸ்திரேட்டு 25-ஆம் தேதி (நாளை) ஒத்தி வைத்தார்.