தயாரிப்பாளர்கள், திரைப்பட தொழிலாளர்கள் இடையேயான சம்பள பிரச்சனை தொடர்ந்து கொண்டே போகிறது. சம்பள பிரச்சனை காரணமாக திரைப்பட தொழிலாளர் அமைப்பான பெப்சி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.

இதனால், நடிகர் ரஜினி நடித்து வரும் காலா, விஜய்யின் மெர்சல் உள்பட 60க்கு மேற்பட்ட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தலைமையில் 3 பேர் கொண்ட குழு, ரஜினியை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசினர்.

அப்போது, போராட்டம் என்பது எப்போதும் தீர்வு ஆகாது. பேச்சு வார்த்தை மூலம் அனைத்தையும் சுமுகமாக முடித்து வைக்கலாம் என ரஜினி கூறியதாக தெரிகிறது. மேலும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தால், பெப்சி தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதுடன், தயாரிப்பாளர்களுக்கும் நஷ்டம் ஏற்படும். எனவே, இதனை பேசி தீர்க்கலாம் என அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், நடிகர் ரஜினி, எனக்கு பிடிக்காத சொற்களில்,வேலை நிறுத்தமும் ஒன்று என குறிப்பிட்டு, அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது.

எனக்கு பிடிக்காத சொற்களில் வேலை நிறுத்தமும் என்கிறது ஒன்று. எந்த பிரச்சனையாக இருந்தாலும், சுய கவுரவம் பார்க்காமல், பொது நலத்தை மட்டும் கருதி அன்பான வார்த்தைகளிலே பேசி தீர்வு காணலாம். தயாரிப்பாளர் சங்கமும், பெப்சி சம்மேளனமும் கலந்து பேசி கூடிய சீக்கிரம் சுமுகமான தீர்வு காண வேண்டுமென்று மூத்த கலைஞன் என்ற முறையில் அன்பான வேண்டுகோள்” இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.