திருவண்ணாமலை

கால்வாயில் ஆக்கிரமிப்புகள் இருந்ததால் விடிய விடிய பெய்த கன மழைக்கு வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் சினம் கொண்ட மக்கள் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரக்கோரி திருவண்ணாமலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது. இதனால் திருவண்ணாமலை போளூர் சாலையில் உள்ள செட்டிகுளமேடு பகுதியில் மழைநீர் சாலையில் பெருக்கெடுத்தது.

அந்தப் பகுதியில் உள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கால்வாயில் மழை வெள்ளம் செல்ல முடியாமல் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்கள் கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர்.

செட்டிகுளமேடு ரேணுகாம்பாள் கோவில் அருகே வேலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டபோது அவர்கள் கிரிவல நாள்களில் காவலாளர்கள் பயன்படுத்தும் சாலை தடுப்புகளை சாலையின் நடுவில் வைத்து மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை நகர காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, “வருவாய்த்துறை அதிகாரிகள் வந்தால்தான் கலைந்து செல்வோம்” என்று காவலாளர்களிடம் மக்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

இதனையடுத்து திருவண்ணாமலை உதவி ஆட்சியர் உமாமகேஸ்வரி, தாசில்தார் ரவி மற்றும் அலுவலர்கள் அங்கு வந்தனர். அவர்கள் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உதவி ஆட்சியர் உமாமகேஸ்வரி, “உடனடியாக கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூர்வாரப்படும்” என்று தெரிவித்தார்.

பின்னர் அவரது உத்தரவின் பேரில் செட்டிகுள மேடு பகுதிக்கு பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு கால்வாய்கள் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, தூர்வாரப்பட்டது.