மாவட்டம் முழுவதும் இடி - மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக கீழ்செருவாயில் 33 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.

கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக சில இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலூரில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மழை பெய்கிறது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

அதன்படி நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் கடலூரில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல, செல்ல இடி–மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இந்த மழை காலை 5 மணி வரை விட்டு, விட்டு பெய்தது. அதன்பிறகு மழை இல்லை.

இதேபோல் கீழசெருவாய், சேத்தியாத்தோப்பு, வானமாதேவி, மே.மாத்தூர், பண்ருட்டி, புவனகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது. சில இடங்களில் இடி–மின்னலுடன் மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

இருப்பினும் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கீழ் செருவாயில் 33 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. குறைந்தபட்சமாக அண்ணாமலைநகரில் 0.60 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. மாவட்டத்தில் சராசரியாக 5.08 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.