சென்னை கே.கே.நகரில் நெடுஞ்சாலைத்துறை பணியாற்றி ஓய்வு பெற்ற பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.50 லட்சம் ரொக்கப்பணம் , சொத்துப்பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன. 

தமிழக நெடுஞ்சாலைத் துறையில் கட்டிடம் மற்றும் பராமரிப்பு பிரிவு முதன்மை பொறியாளராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர் ஜெயராமன். கே.கே. நகரில் பி.டி.ராஜன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஜெயராமன் வசித்து வருகிறார்.

தமிழக நெடுஞ்சாலைத் துறையில் கட்டிடம் மற்றும் பராமரிப்பு பிரிவு முதன்மை பொறியாளராக பணிபுரிந்த போது ஜெயராமன் சாலை அமைக்க ஒப்பந்தம் விட்டதில் லஞ்சம் வாங்கியதாகவும் இதில் ஏராளமான கருப்பு பணம் பதுக்கி வைத்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஜான் கிளமண்ட் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று காலையில் இருந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. இதில் அவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத லட்சக்கணக்கிலான பணம் மற்றும் சொத்து பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரையடுத்து அவர் வீட்டில் உள்ள ஆவணங்ளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கணக்கில் வராத 50 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தகவல்.

மேலும் இவர் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஜவஹர்லால் நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்தி வருவதாக தெரிகிறது. இவரது மனைவி சாந்தி தான் இந்த கல்லூரியின் தலைவராக உள்ளார்.