மத்திய வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடிப்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கே.வி.கே. காட்டுக் குப்பத்தில் 5 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பாம்பன், தேவக்கோட்டை, ஆயக்குடி, ஆகிய இடங்களில் தலா 3 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும், சென்னையில் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கையொட்டிய பகுதியில் புதிதாக காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இரண்டொரு நாளில் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
