தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. கேரளா மற்றும் கர்நாடகாவில் பருவமழை வெளுத்து வாங்கியது. ஆனால் தமிழகத்தில் எதிர்பார்த்த அளவுக்கு பருவமழை கைகொடுக்கவில்லை. கோவை, நெல்லை, தேனி, தருமபுரி உள்ளிட்ட இடங்களில் மட்டுமே ஒரளவு மழை பொழிந்தது. 

இந்நிலையில் கடந்த சில தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மீண்டும் அக்னி நட்சத்திர வெயில் தொடங்கி விட்டதோ என்ற அளவுக்கு வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்தனர். வெயிலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழகத்தில் மழை வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்யும். சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

கடந்த 24 மணி நேரத்தில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் 5 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஓமலூர், கூடலூர், சின்னக்கல்லார், கொல்லிமலை உள்ளிட்ட இடங்களில் 4 செ.மீட்டரும், ஏற்காட்டில் 3 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் முதல் 24 டிகிரி செல்சியஸ் வெயில் நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.