சென்னை:

பொங்கல் பண்டிகைக்கு ஊருக்குச் செல்வதற்காக, ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடக்கி அரை மணி நேரத்தில் காலியாகிவிட்டது. 

வரும் 2018 ஜனவரியில் வரும் தைப் பொங்கலுக்கு தங்கள் ஊர்களுக்குச் செல்வதற்காக ரயில்களில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. இதனால் நீண்ட வரிசையில் இன்று காலை முதலே ரயில் நிலையங்களில் பயணிகள் நின்றிருந்தனர்.

இந்நிலையில் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களின் முன்பதிவு தொடங்கிய அரை மணி நேரத்திலேயே முடிந்து போனது. 

மேலும், ஆன்லைன் முறையில் முன்பதிவும் இன்று மேற்கொள்ளப்பட்டதால், டிக்கெட்டுகள் விரைவில் முன்பதிவு செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலுக்கு வந்துவிட்டது. இதனால் முன்பதிவுக்காகக் காத்திருந்தவர்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

பொங்கல் பண்டிகைக்கு ஊருக்குச் செல்ல திட்டமிட்டவர்கள், ஜன.13ஆம் தேதி சனிக்கிழமை என்பதால் ஜன.12ஆம் தேதியே பயணம் செய்ய இன்று முன்பதிவுக்கு முயன்றனர். ரயிலில் பயணம் செய்ய தென்மாவட்டங்கள், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல இன்று காலை முன்பதிவு தொடங்கியது. 

4 மாதங்களுக்கு முன்னர் ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்யலாம் என்பதால், பொங்கல் பண்டிகைக்குச் செல்ல இன்றே திட்டமிட்டு முன்பதிவு செய்ய முண்டியடித்தனர் பயணிகள்.