சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக உயர் அதிகாரிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிய மர்மநபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மொபைல் மூலம் 2 முறை எஸ்எம்எஸ் நேற்று மாலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
கட்டுப்பாட்டு அறைக்கு தமிழில் வந்த எஸ்.எம்.எஸ்-ல் ‘எங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் சென்ட்ரல், எழும்பூர் ரயில் ஆகிய நிலையங்களிலும், கோயம்பேடு பஸ் நிலையத்திலும் வெடிகுண்டு வெடிக்கும். இப்படிக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

எழும்பூர் ரெயில் நிலையத்தின் பிரதான நுழைவாயில் பகுதி, வாகன நிறுத்தும் இடம், நடைமேடைகள், ரயில்கள் ஆகியவற்றில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் இரவு 9.30 மணி முதல் தீவிர சோதனை நடத்தினார்கள்.
இதையடுத்து பிரதான நுழைவுவாயில் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு ரயில் ஏறுவதற்காக உள்ளே வரும் பயணிகளை மட்டும் அவர்கள் கொண்டு வரும் டிக்கெட்டை சரிபார்த்து ரயில் நிலையத்துக்குள் அனுமதித்தனர்.
\
மேலும், பயணிகள் கொண்டு வரும் உடமைகள் அனைத்தையும் ஸ்கேனர் கருவி மூலம் தீவிர சோதனை நடத்தி அதன் பிறகே உள்ளே கொண்டு செல்ல அனுமதித்தனர்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தின் அனைத்து நுழைவாயில் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, பயணிகளின் உடமைகள் அனைத்தையும் சோதனை செய்தனர். ரயில் நிலையத்தின் நடைமேடைகள், பார்சல் அலுவலகங்கள், பயணிகள் தங்கும் அறை,காத்திருக்கும் அறை, ரயில்கள், வாகனம் நிறுத்தும் இடங்கள், டிக்கெட் கவுண்ட்டர்கள், கழிப்பறைகள், நடைமேடைகளில் உள்ள கடைகள் ஆகியவற்றிலும் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் ‘மெட்டல் டிடெக்டர்’ கருவிகளை கொண்டு சோதனை நடத்தினார்கள். அப்போது சந்தேகத்துக்கிடமாக பையுடன் திரிந்த வடமாநிலத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
அதேபோல், கோயம்பேடு பஸ் நிலையத்திலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. புறநகர் பஸ் நிலையம், வெளியூர் செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டு இருக்கும் நடைமேடைகளிலும், பஸ்களிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
கோயம்பேடு பஸ் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் பயணிகளை பலத்த சோதனை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
3 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் கடைசியில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு எஸ்.எம்.எஸ். மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் யார்?என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
