வேலூர்

அரக்கோணத்தில் இரயில் பயணிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டம், அரக்கோணம் இரயில் நிலையம் முன்பு இரயில் பயணிகள் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இரயில் பயணிகள் சங்கத் தலைவர் நைனா மாசிலாமணி தலைமை வகித்தார். எஸ்.முனிபிரசாத், ஜெ.ஷாநவாஸ், ஜி.டி.என்.அசோகன், துரை ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் ஜெ.கே.ரகுநாதன் வரவேற்றார்.

இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை வேலூர் மாவட்டத் தலைவர் கே.எம்.தேவராஜ், அனைத்து இரயில் பயணிகள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் எம்.மூர்த்தி, ஏ.சிவசுப்பிரமணியராஜா, வீரராகவன், க.கவுதம், ஜெயராஜ், ஏ.பி.எம்.சீனிவாசன் ஆகியோர் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், “அரக்கோணம் - தக்கோலம் அகல இரயில் பாதையில் மின்மயமாக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

அரக்கோணம் இரயில் நிலையத்தில் அனைத்து விரைவு இரயில்கள் மற்றும் அதிவிரைவு இரயில்கள் நின்றுச் செல்ல வேண்டும்.

அரக்கோணம் இரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு 12 பெட்டிகள் கொண்ட மின்சார இரயில் இயக்க வேண்டும்.

சேலத்தில் இருந்து காட்பாடி வரை இயக்கப்பட்டு வரும் மின்சார இரயிலை அரக்கோணம் வரை நீட்டிப்புச் செய்ய வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

இதில், இரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், மக்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் பொருளாளர் எம்.சிவக்குமார் நன்றித் தெரிவித்தார்.