சென்னையில் ரயில் பெட்டியில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் நகைகளை கடத்த முயன்ற ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பாரி சிபிஐ அதிகாரிகளிடம் சிக்கினார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
திருச்சியிலிருந்து சென்னைக்கு வந்து சென்னையிலிருந்து ஹவுரா நோக்கி ரயில் ஒன்று புறப்பட ரெடியாக இருந்தது. அப்போது சிபிஐ அதிகாரிகள் அந்த ரயிலை சோதனையிட வேண்டும் என நிறுத்தினர்.
அந்த ரயிலின் சலூன் கோச் எஅனப்படும் முழுதும் ஏசிமயமாக்கப்பட்ட ரயில் பெட்டியை சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டனர். சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகை , பணம் இருந்தது.
இந்த பெட்டி ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் வழியாக அவுரா செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரயில் பெட்டியில் அதுவும் பிரத்யோக ஏசி கோச்சில் நகை பணம் கடத்தப்படுவது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை ஐஜியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.அவரது சுழல் விளக்கு பொறுத்தப்பட்ட காரிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பாரியின் சொந்த ஊர் ஒடிசா மாநிலத்திலுள்ள புவனேஷ்வர். அங்கு எடுத்து செல்வதற்காக பணத்தையும் நகையையும் கடத்தினாரா? என சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோதனையின் போது எவ்வளவு பணம், நகை கைப்பற்றப்பட்டது எனபது குறித்து இதுவரை சிபிஐ அதிகாரிகள் தகவல் தெரிவிக்கவில்லை. ஆனால் கோடிக்கணக்கான மதிப்புள்ள நகை பணம் கைப்பற்றப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
விசாரணையின் முடிவில் ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பாரி மீது என்ன வகையான நவடிக்கை வரும் என்பது பற்றி இனிமேல் தான் தெரியவரும்.
