திருச்சியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற திமுகவினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் மத்திய அரசை கண்டித்து காவிரி தமிழகம் முழுவதும் ரயில்மறியல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, திருச்சி ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தின் முன்பு திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், மேற்கு தொகுதி எம்எல்ஏவுமான கே.என்.நேரு தலைமையில் திமுக, காங்கிரஸ் மற்றும் அதன் தோழமை கட்சியினர் விருதாச்சலம்-திருச்சி பயணிகள் ரயிலை மறிக்க முயன்றனர்.
அப்போது அவர்களை ரயில் நிலையம் வாசலிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்த போராட்டத்தில் மாநகர செயலாளர் அன்பழகன், எம்எல்ஏ சௌந்தரபாண்டியன், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ், வியாபாரிகள் சங்க கூட்டமைப்பின் செயலாளர் கோவிந்தராஜீ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
