raid in Dinakaran supporter Senthilbalaji relatives friends house
கரூர்
கரூரில் முன்னாள் அதிமுக அமைச்சரும், டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளருமான வி.செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் நிதி நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர்.
தற்போது தினகரன் அணியில் இருக்கிறார் வி.செந்தில் பாலாஜி. இவர் உள்பட 18 எம்.எல்.ஏ-க்களை தமிழகச் சட்டப்பேரவைத் தலைவர் தனபால் சமீபத்தில் தகுதிநீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகள், அலுவலகங்கள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட 18-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று வருமானவரித்துறை அதிகாரிகள் திடிரென சோதனை நடத்தினர்.
கரூர் மாவட்டம், இராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜி உறவினர்களின் துணி ஏற்றுமதி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், குளத்துப்பாளையம், இராயனூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அவரது நெருங்கிய நண்பர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தினர்.
மாவட்டத்தில் மொத்தம் 18 இடங்களில் பல குழுக்களாகச் சென்று ஒரே நாளில் சோதனை நடத்தினர். காலை 8 மணிக்கு தொடங்கிய இந்தச் சோதனை இரவு வரையிலும் நீடித்தது.
இந்தச் சோதனையின்போது வெளிநபர்கள் யாரையும் அதிகாரிகள் உள்ளேச் செல்ல அனுமதிக்கவில்லை. மேலும், சோதனையில் முக்கிய ஆவணங்கள் எதுவும் சிக்கியதாக தெரியவில்லை.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் சோதனை தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
