பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து வருமானவரித் துறை,அமலாக்கத்துறை, சிபிஐ, போன்ற மத்திய அரசின் அமைப்புகள் பல அதிரடிகளை அரங்கேற்றி வருகிறது. கறுப்புப் பணத்தை வெளிக்கொணரும் வகையில் நாடு முழுவதும் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் ஹவாலா பணம் அதிக அளவில் டிபாசிட் செய்யப்பட்டதாக வந்த புகாரை அடுத்து கேரளாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இதன் அடிப்படையில் கண்ணூர், கோழிக்கோடு, திருச்சூர் ஆகிய பகுதிகளில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் அமலாக்கத்துறையினரும், கொல்லம், மணப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சிபிஐ அதிகாரிகளும் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் ஏற்கனவே கூட்டுறவு வங்கிகளில் வருமான வரித்துறையினர் ஆய்வு நடத்தினர். நேற்று மாலை சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் திடீர் சோதனையை தொடங்கிய அவர்கள் அதிகாலை வரை நடத்தினர். மேலும் அம்மாவட்டத்தில் உள்ள 64 கிளை வங்கிகளில் இருந்தும் ஆவணங்களை கொண்டுவரச்செய்து ஆய்வு நடத்தினர்,

சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராக இருப்பவர் அதிமுக வைச் சேர்ந்த இளங்கோவன் என்பதும் அவரை குறிவைத்தே இந்த ரெய்டு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.