Asianet News TamilAsianet News Tamil

உஷார்….மெரீனாவுல ஏதாச்சும் சாப்பிட போறீங்களா… ‘300 கடைகளில் இருந்து 140 கிலோ கெட்டுப்போன உணவுகள்’ பறிமுதல்…

Love Bajjis at Marina beach Be careful 140 kgs of stale food has been seized from stalls
Love Bajjis at Marina beach? Be careful, 140kgs of stale food has been seized from stalls
Author
First Published May 21, 2017, 8:25 AM IST


சென்னை மெரீனா கடற்கரையில் 3 கி.மீ தொலைவுக்கு சிறிய கடைகள் அமைத்துள்ள நபர்களிடம் இருந்து உணவுப்பாதுகாப்பு மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் உடலுக்கு  கேடுவிளைக்கும் வகையில் 140 கிலோ கெட்டுப்போன உணவுகளை பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் பயன்படுத்தவே முடியாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் மீன்கள், காலாவதியான ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் ஆகியவை இருந்தன.

சென்னை மெரீனா கடற்கரைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து செல்கிறார்கள். விடுமுறைநாட்களில் லட்சக்கணக்கில் மக்கள் குவிவார்கள். மக்களின் கூட்டத்தை பயன்படுத்தி இங்கு ஏராளமான சிறு திண்பண்டக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சிறிய வடை கடை, மீன் கடை, ஐஸ்கிரீம்கடை, குளிர்பானங்கள் என ஏராளமான கடைகள் இருக்கின்றன. லாபநோக்கில் செயல்படும் இந்தகடைகளில் உணவுப்பொருட்கள் சுகாதாரமாக இருப்பதில்லை என அங்கு வரும் மக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

அதுமட்டுமல்லாமல், வடை, பஜ்ஜி, சமோசா செய்வதற்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் தொடர்ந்து ஒரே எண்ணெயாகவும், மீன் பொறிக்க பயன்படும் எண்ணெய் மிகவும் அசுத்தமாக இருப்பதாக மக்கள் உணவுப்பாதுகாப்பு துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, நேற்று முன் தினம், வருவாய் துறையினர், உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் திடீர் ஆய்வு நடத்தினர். அண்ணா சதுக்கம் முதல் கலங்கரை விளக்கம் வரை உள்ள 3 கி.மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டு இருந்த உணவுக்கடைகளில் அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி உணவுப்பொருட்களின் தரத்தை ஆய்வு செய்தனர்.

இதில் பெரும்பாலான கடைகளில் வைக்கப்பட்டு இருந்த உணவுகள் மக்கள் உண்ணமுடியாத அளவுக்கு கெட்டுப்போய் இருந்தன, சில பொருட்கள் கலப்படம் செய்யப்பட்டதாக இருந்தன, செயற்கையான வண்ணங்கள் கலந்தும் வைக்கப்பட்டு இருந்தது அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதில் அதிகாரிகள் கெட்டுப்போன உணவுகள், அழுகிய பழங்கள், மீன்கள், காலாவதியான ஐஸ்கிரீம்கள், குளிர்பானங்கள், அங்கீகாரம் இல்லாத சோதனைக்குட்படாத குளிர்பானங்கள், செயற்கை வண்ணங்கள் அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து உணவுப்பாதுகாப்பு அதிகாரி ஆர். கதிரவன் கூறுகையில், “ மெரினாகடற்கரையில் மக்கள் சாப்பிடமுடியாத நிலையில் இருந்த 140கிலோ கெட்டுப்போன உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில்  100 கிலோ புழு விழுந்த பழங்கள், 24 கிலோ அழுகிய மீன்கள், காலாவதியான 7 கிலோ ஐஸ்கிரீம்,பிஸ்கட்ஸ், காலாவதியான 40 லிட்டர் குளிர்பானங்கள், 31 லிட்டர் மிக மோசமான பயன்படுத்த முடியாத சமையல் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. எந்த கடைக்காரரும் தண்டிக்கப்படவில்லை. பெரும்பாலான கடை உரிமையாளர்களுக்கு உணவுப்பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு இல்லை. ஆதலால், முதல்முறையாக எச்சரிக்கையுடன் விட்டுவிட்டோம்.

மேலும், இந்த ஆய்வில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 3 கிலோவும், செயற்கை வண்ணப்பொடிகள் 4 கிலோவும் சிக்கியது. கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ. 30 ஆயிரம் இருக்கும். அடுத்து வரும் நாட்களில் இதுபோன்ற சோதனைகள் அடிக்கடி நடத்தி, மக்களின் சுகாதாரம் காக்கப்படும்’’ எனத் தெரிவித்தார்.

உணவுப்பாதுகாப்பு தரக்கட்டுப்பாட்டு சட்டத்தின் படி, கெட்டுபோன உணவுகளை விற்கும் கடைக்காரருக்கு அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கமுடியும். ஆனால், பெரும்பாலான கடைக்காரர்கள் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து வந்ததால், அவர்களை எளிதில் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்துவது கடினம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios