ஸ்வீட் பாக்ஸில் வெற்றியைத் தட்டிச்சென்ற ராகுல்! இது தான் 41வது வெற்றி! மு.க.ஸ்டாலின் பெருமிதம்!!
"40 க்கு 40 வெற்றி திராவிட மாடல் அரசின் மீது மக்களுக்கு இருக்கும் திருப்திக்குக் கிடைத்த வெற்றி. ஆனால் அதைப் பற்றி யாரும் பேசமாட்டார்கள்" என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கோவையில் இன்று திமுக கூட்டணி சார்பில் மும்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
விழாவில் தலைமையுரை ஆற்றிய முதல்வர் ஸ்டாலின், நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற வெற்றி சாதாரண வெற்றி அல்ல, வரலாற்று வெற்றி என்று குறிப்பிட்டார். "கடந்த முறை இங்கே நடந்த கூட்டம் இந்தியா முழுவதும் ‘டிரெண்ட்’ ஆனது. அதற்குக் காரணம், பிரதமர் மோடி எட்டு முறை தமிழ்நாட்டிற்கு வந்து கட்டமைத்த பிம்பத்தை, ராகுல் காந்தி ஒரு ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து க்ளோஸ் செய்துவிட்டார். அன்று ராகுல் காந்தி வழங்கிய இனிப்பு, கருத்துக்கணிப்புகளைத் தகர்த்துவிட்டது" எனவும் அவர் தெரிவித்தார்.
"2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 40 க்கு 40 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அப்போது, ஆட்சியில் இருந்த ஜெயலலிதா மக்கள் விரோத அரசியலில் இருந்து பின்வாங்கினார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி இது எங்களுக்குக் கிடைத்த 41வது வெற்றி என்று சொன்னார். அதுமட்டுமல்ல, கருத்துக்கணிப்புகளில் பாஜக தான் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்ற சொன்னார்கள். ஆனால், காங்கிரஸ் கூட்டணிதான் ஆட்சியைப் பிடித்தது" என்று நினைவுகூர்ந்தார்.
நாடாளுமன்றத்தில் அண்ணா, மாறன் போல செயல்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின் பேச்சு
தொடர்ந்து பேசிய அவர், "இப்போதும் அதேபோல பாஜக 400 இடங்களைக் கைப்பற்றும் என்று சொன்னார்கள். ஆனால் அதையெல்லாம் உடைத்து பாஜக தனித்து ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற நினைத்தவர்களை புரட்சியாளர் அம்பேத்கர் கொடுத்த சட்டப் புத்தகத்திற்கு முன்னால் தலைகுனிந்து நிற்க வைத்திருக்கிறோம். கலைஞர் ஸ்டைலில் சொன்னால், இதுதான் இந்தியா கூட்டணியின் 41வது வெற்றி" என்றும் குறிப்பிட்டார்.
"2004 இல் 40 க்கு 40 வெற்றி பெற்றபோது ஆளும் அதிமுக மீதான அதிருப்தியில் பெற்ற வெற்றி என்று சொன்னார்கள். 2024 இல் பெற்றுள்ள 40 க்கு 40 வெற்றி திராவிட மாடல் அரசின் மீது மக்களுக்கு இருக்கும் திருப்திக்குக் கிடைத்த வெற்றி. ஆனால் அதைப் பற்றி யாரும் பேசமாட்டார்கள்" எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து திமுக கூட்டணி பெறும் வெற்றிகளுக்கு காரணம், இது கொள்கை கூட்டணியாக இருப்பதுதான் எனவும் சுட்டிக்காட்டினார். வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் 200க்கும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றுவோம் என்ற இலக்கை நோக்கி நம்முடைய பயணத்தை இன்றிலிருந்து தொடங்குவோம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணிக்கும் அதிமுக: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு