ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை என்றார் போல கால் நூற்றாண்டுகளாக வதந்திகளை முறியடிப்பதிலும் அவர் நிஜமாகவே கலைஞர் தான்.திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஒரு வாரமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு கோபாலபுர இல்லத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் 2 நாட்களுக்கு முன்னர் நள்ளிரவு கோபாலபுர இல்லத்தில் இருந்து அழைத்து வரப்பட்டு காவேரி மருத்துவமனையில் தீவிர சிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது அவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளாக இது போன்ற வதந்திகளை திமுக தலைவர் கருணாநிதி எதிர்கொண்டவர். கடந்த வாரத்தில் பல்வேறு தரப்பில் வந்த வதந்திகளையும் அவை ஒன்றுமில்லாமல் போனதையும் அனைவரும் அறிந்த ஒன்று. 

பிறகு திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நிலை நலிவுற்றதால் 24 மணி நேரமும் மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் அவரது கோபாலபுர இல்லத்திற்கு வந்து நலம் விசாரித்து சென்றனர். அப்போது சமூக வலைதளங்களில் கருணாநிதி குறித்து பல்வேறு வதந்திகள் பரவின. வதந்திகளை நம்ப வேண்டாம்! திமுக தலைவர் நலமுடன் இருக்கிறார் என்று திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தகவல் தெரிவித்தார். ஆனாலும் நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டபோதும் எம்பால்மிங் செய்ய தான் என்று பலர் வதந்திகளை பரப்பினர். ஆனாலும் ஆ.ராசா மருத்துவமனையில் பேட்டியளித்த போது திமுக தலைவர் நலமுடன் இருப்பதாக கூறினார். பின்னர் வெளியிடப்பட்ட காவேரி மருத்துவமனை அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் தொண்டர்கள் கலைந்தாலும், அவர்கள் சந்தேகத்துடனே கலைந்தனர். நேற்று மதியம் குடியரசுத் துணைத் தலைவர் மற்றும் ஆளுநர் பன்வரிலால் ஆகியோர் திமுக தலைவர் சந்தித்த படம் வெளியானது. அப்படத்தில் நாடித் துடிப்பு பதிவாகி இருந்தது. கூடுதலாக செயற்கை சுவாசமும் பொருத்தப்படாமல் இருந்ததால் பொதுமக்களும் மற்றும் திமுக தொண்டர்களும் சற்று நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

நேற்று இரவு அவரது உடல்நிலையில் திடீரென பின்னடைவு ஏற்பட்டது. பிறகு மருத்துவர் குழுவின் முயற்சியால் உடல் நிலை சீரான நிலைக்கு வந்தது. ஆனாலும் சமூக வலைதளங்களில் பரவி வதந்தியால் தொண்டர்கள் மருத்துவமனை முன்பு திரண்டனர். திடீரென பேராசிரியர் மருத்துவமனைக்கு வந்ததால் மீண்டும் பதற்றம் தொற்றி கொண்டது. இதுவும் வதந்தி தான் என்று காவேரி மருத்துவமனையும் மற்றும் ஆ.ராஜாவும் கூறினார்.

 மு.க அழகிரியோ அப்பாவின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்றார். இதன் காரணமாகவே தாம் வீட்டுக்கு செல்வதாகவும் தெரிவித்தார். தொண்டர்களின் சந்தேகத்தை தெளிவுப்படுத்திவிட்டு சென்றார். ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை என்ற சொல்லுக்கு ஏற்றார்போல இன்னும் எத்தனை வதந்திகள் வந்தாலும் அதனை முறியடிப்பார் திமுக தலைவர் கருணாநிதி என்ற குரல் காவேரியை சுற்றிக் கேட்டுக் கொண்டே இருக்கிறது. ஏனெனில் வதந்திகளை முறியடிப்பதிலும் அவர் கலைஞர் என்பது தான் அவரது வரலாறு என்பது குறிப்பிடத்தக்கது.