தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பயணிக்கும் விமானத்தில் தமிழர்கள் யாரும் பயணிக்க வேண்டாம் என்று அமமுக கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி கூறியுள்ளார்.

கடந்த 3 ஆம் தேதி அன்று தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள தமிழிசை சவுந்தரராஜன், சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் பயணப்பட்டார். அதே விமானத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த சோஃபியா என்ற பெண்ணும் பயணம் செய்தார். அப்போது அவர், பாஜகவுக்கு எதிராக கோஷமிட்டுள்ளார். இது தொடர்பாக, தமிழிசை சௌந்தரராஜன் சோபியா மீது புகார் கூறினார்.
 இதையடுத்து, சோஃபியா கைது செய்யப்பட்டார்.

சோபியா நடந்து கொண்டது, எனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்ததால்தான், நான் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன் என்றும், எக்காரணத்தைக் கொண்டும் புகாரை திரும்பப்பெற மாட்டேன் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருந்தார்.

கைது செய்யப்பட்ட சோபியா, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். சோபியாவின், கைதுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். மத்தியில் நடப்பது தங்களது ஆட்சி என்ற மமதையில், இளம் பெண் சோபியாவுடன், தமிழிசை வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்றும், தமிழிசையின் இந்த செயல் மாநில தலைவர் என்ற முறையில் பெருந்தன்மையாகவும், முதிர்ச்சியாகவும் இல்லை என்று டிடிவி தினகரன் கூறியிருந்தார்.

வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பும் இந்திய மக்கள், குறிப்பாக தமிழக மக்கள் பாஜக தமிழக தலைவர் தமிழிசை பயணிக்கும் விமானத்தில் பயணிக்க வேண்டாம் என அமமுக கர்நாடகா மாநிலச் செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியோடு அமமுக ஒருபோதும் கூட்டணி வைக்காது என்றும் புகழேந்தி கூறியுள்ளார்.