தமிழ்நாட்டில் கோடை காலம் போட்டுப் பொளக்கிறது  என்பதை அறிந்து கொள்ள உதவும் சமிஞைகளில் முக்கியமானது கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை, சாணமாவு பகுதிகளின் வழியே கூட்டம் கூட்டமாக யானைகள் இடப்பெயர்வு செய்வதுதான். ஆனால் இந்த வருடம் கோடை கால துவக்கத்திலேயே இந்த இடப்பெயர் நடந்திருப்பது ஆச்சரியப்படுத்துவதோடு, கோடை இந்த முறை எந்தளவுக்கு போட்டுப் பொளக்கப்போகிறதோ? என்று அதிர்ச்சியடையவும் வைத்திருக்கிறது. 

யானைகள் வருடம் முழுக்க உணவு, நீர் தேடி இடம் பெயர்ந்து கொண்டே இருக்கும். இதற்கு ‘வலசை போகுதல்’ என்று பெயர் தமிழகத்தில் கோடை கொட்டமடிக்கும் சமயத்தில் பெரும் யானைக்கூட்டமானது  கிருஷ்ணகிரி வழியே கர்நாடகா மாநிலத்தினுள் சென்றுவிடும். இது பொதுவாக ஏப்ரல் மாத துவக்கத்திலிருந்து மே பாதி வரையில் நிகழும். அப்போது சர்வ சாதாரணமாக அறுபது, எண்பது யானைகள் கூட இப்படி அப்பகுதிகளில் முகாமிட்டு இரை தேடுவதும் பின் இடம் பெயர்வதும் நடக்கும். சில வேளைகளில் வனத்துறையினரும், கிராம மக்களும் அவற்றை கர்நாடக எல்லைக்குள் துரத்தி விடுவதும் வழக்கம். 

ஆனால் இந்த ஆண்டில் கோடை இப்போதுதான் துவங்கியிருக்கும் நிலையில் தேன்கனிக்கோட்டை அருகே பாலதோட்டனப்பள்ளி எனுமிடத்தில் பூங்குட்டிகள், சற்றே வளர்ந்த குட்டிகளுடன் சுமார் இருபது யானைகள் சாலையை கடந்து வனம் நோக்கி நகர்ந்திருக்கின்றன. இவற்றை கிராம பொதுமக்கள் ஒலி எழுப்பி விரட்டிச் சென்றது வீடியோவாய் பதிவாகியிருக்கிறது. 

பொதுவாக யானைகள் ஒத்தையாக திரிகையில்தான் ஆபத்தானவகையாக இருக்கும். எங்கே தன்னை அடித்துவிடுவார்களோ என்று பயந்து அது முதலில் வந்து தாக்கிவிடும். ஆனால் கூட்டமாக இருக்கையில் அப்படி மனிதர்களை தாக்காது. ஆனால் இந்த யானைகள் கூடத்தில் குட்டிகள் இருப்பதால், கிராம மக்களும் வனத்துறையினரும் எச்சரியாய் இருத்தல அவசியம். காரணம், குட்டிக்கு இடையூறு தருவார்கள் எனும் எண்ணத்தில் மனிதர்களை தாக்க வந்துவிடும் அவை. 

இது ஒரு புறம் இருக்கையில், கோடையின் துவக்கத்திலேயே யானைகள் இப்படி இடம் பெயர்வதால் ‘இந்த முறை வெயில் காலம் மிக கொடுமையாக இருக்குமோ?’ என்று சூழலழியலாளர்களும், வன ஆராய்ச்சியாளர்களும் அச்சமடைந்திருக்கின்றனர்.