சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடிய புதுப்பேட்டை மெக்கானிக் மற்றும் வியாபாரிகள் 5 பேரை போலீசார் கைது செய்து 10 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

சென்னையில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் காணாமல் போவது வாடிக்கையான விஷயமாக உள்ளது. இதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனாலும் மோட்டார் சைக்கிள் திருட்டு அதிகரித்தே வருகிறது.

சென்னை, பல்லவன் நகரில் வசிப்பவர் குட்டி(40). இவர் கடந்த 07 ஆம் தேதி அன்று இரவு தனது இருசக்கர வாகனத்தை தனது வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை திரும்பி வந்து பார்த்தபோது அவரது இருசக்கர வாகனத்தை காணவில்லை. 

வீட்டு வாசல் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த அவரது பைக்கை யாரோ திருடிச்சென்று விட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக குட்டி அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

டி-2 அண்ணாசாலை குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் தனிப்படையினர் இன்று அதிகாலை ஜி.பி ரோடு, தாயார் சாகிப் ரோடு சந்திப்பில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அங்கு இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த மூன்று நபர்களை மடக்கிப்பிடித்து விசாரணை செய்தனர்.

அப் போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். மேலும் வாகனத்தின் ஆவணங்களை சோதனை செய்த போது மேற்படி வாகனம் திருட்டு வாகனம் என்பது தெரியவந்ததன் பேரில் மூவரையும் கைது செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பிடிபட்ட நபர்களின் பெயர் புதுப்பேட்டை லப்பைதெருவில் வசிக்கும் கசாலி மரைக்காயர் என்பவரின் மகன் பாபு(32) புதுப்பேட்டை , கொய்யாத்தோப்பு வீரபத்ரன் தெருவில் வசிக்கும் நூர் முகமது என்பவரின் மகன் நிஜாம் (31) புதுப்பேட்டை , எல்லப்பன் தெருவில் வசிக்கும் மீரான் முகமது என்பவரின் மகன் முகமது சம்சு அலியார்(27) என தெரிய வந்தது. 

இதில் பாபு இருசக்கர வாகன வியாபாரி , நிஜாம் விரபத்ரன் தெருவில் சொந்தமாக மெக்கானிக் ஷெட் வைத்திருக்கிறார். ரேஸ் பைக்குகள் ரெடி பண்ணுகிறார். பைக்குகளை பிரித்து மாடல் மாற்றுவதில் கில்லாடி, அலியார் இரு சக்கர வாகன வியாபாரி.

 மேலும் பாபு , நிஜாம், சம்சு அலியார் மூன்று பேரும் சேர்ந்து சேர்ந்து ஓட்டேரி, முகப்பேர், திருவல்லிக்கேணி, மைலாப்பூர் ஆகிய பகுதிகளில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களை தொடர்ச்சியாக திருடுவதும் அதை நிஜாம் மெக்கானிக் ஷெட் எதிரில் உள்ள மாநகராட்சி விலங்கு மருத்துவமனை காம்பவுண்டுக்குள் மறைத்து வைப்பதும் வாடிக்கை. 

பின்னர் இரவில் திருடிய மோட்டார் சைக்கிள்களை பார்ட் பார்ட்டாக பிரித்து ஆந்திரா கொல்கத்தாவுக்கு அனுப்பிவிடுவார்கள் ,இவர்கள் இதுவரை திருடிய பைக்குகளின் எண்ணிக்கை பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். 

மேலும் விசாரணையில் மேற்படி மூவரும் சேர்ந்து திருடிய இருச்சக்கர வாகனங்களை புதுப்பேட்டையைச் சேர்ந்த காதர் மொய்தீன் எனபவரின் மகன் தமிம் அன்சாரி(34) மற்றும் புதுப்பேட்டை (45) முரளிதரனிடம் கொடுத்து பழைய ஆர்.சி புக்குகள் இணைத்து வெளியில் விற்று வந்ததும் தெரியவந்துள்ளது. மேற்படி திருட்டு இருசக்கர வாகனங்களை வாங்கிய தமிம் அன்சாரி, முரளிதரன், இருவரையும் கைது செய்தனர். குற்றவாளிகளிடமிருந்து போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் முதல் கட்டமாக 10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட 5 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.