puducherry fishermen protest in sea
இலங்கை கடற்படைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக புதுச்சேரி மீனவர்கள், கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த மீனவர்கள், கடந்த 6ம் தேதி நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர், துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், பிரிட்ஜோ என்ற வாலிபர் பலியானார். சிலர் படுகாயம் அடைந்தன

மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதற்கு, தமிழகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சியினர், இலங்கை கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு உடனடியாக, இதற்கான செயல்பாட்டில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோவின் சடலத்தை, மருத்துவமனையில் இருந்து வாங்காமலும், இலங்கை கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், புதுச்சேரி மாநிலம் நல்லவாடு மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவ மக்கள், இன்று காலை முதல் பெண்கள், குழந்தைகளுடன், குடும்பத்தோடு கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க வேண்டும். இலங்கை கடற்படையினரால் சுட்டு கொல்லப்பட்ட பிரிட்ஜோவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.
இதில் சம்பந்தப்பட்ட இலங்கை கடற்படையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
