சுகாதாரத்துறை செயலாளர் கொடுத்த அலெர்ட் !! அதிகரிக்கும் 'கொரோனா..' எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகமாகிறது என்று அலெர்ட் கொடுத்து இருக்கிறார் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.
சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன். அப்போது பேசிய அவர், ‘ நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில் தடுப்பூசி செலுத்துவது மந்தமாக நடைபெற்று வருகிறது.
சுகாதாரப் பணியாளர்கள் முழு அளவில் அதற்கு தயாராக இருந்தாலும் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்துவதில் சுணக்கம் காட்டுகின்றனர். இன்று 7,86,700 பேர் இன்று தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக தடுப்பூசி செலுத்துவது மந்தமாக இருந்தது. இதுவரை தமிழகத்தில் முதல் தவணை 5 கோடியே 27 லட்சம் பேர் போட்டுள்ளனர். இது 91%. இரண்டாவது தவணையை 4 கோடியே 12 லட்சம் பேர் போட்டுள்ளனர்.இது 71.2% ஆகும். 5,60,019 பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அது 81.21% ஆகும்.கேரளாவில் தொற்று குறையவில்லை. நாளொன்றுக்கு 19,000 பேர் என்கிற அளவில் தொற்று பரவுகிறது. தமிழகத்தில் 1.12 கோடி பேர் இரண்டாவது தவணை செலுத்தவில்லை. பொதுமக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
இணை நோய் உள்ளவர்களின் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவதில் மக்கள் கவன குறைவாக உள்ளனர். தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பிப்ரவரி 1ஆம் தேதி 4500க்கும் மேல் இருந்த நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் 1824 ஆக குறைந்துள்ளது. பிப்ரவரி 13 நள்ளிரவு முதல் விமான போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.
பரிசோதனை எடுப்பவர்கள் விகிதம் 2% குறைக்கப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் நோய் தொற்றின் அளவு எப்படி உள்ளது என பார்க்கும் போது மேற்கு மாவட்டம், கிருஷ்ணகிரி, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் தொற்று பரவல் சற்று அதிகமாக உள்ளது. அனைவரின் கவனமும் கொரோனா பரவுவதில் இருக்கும்போது புற்றுநோய் அதிகரித்து வருவது கவனிக்கக் கூடிய ஒன்றாகும்.
புற்றுநோயை கட்டுப்படுத்துவதில் உயர் தொழில்நுட்ப சிகிச்சைகள் தமிழகத்தில் வழங்கப்படுகின்றன. அடையாறு புற்றுநோய் மையத்தின் சார்பில் புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் ஆய்வு செய்யப்படுகின்றது, அதன் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது’ என்று கூறினார்.