திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் முகாமில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆதார் அட்டை முகாமில் 30-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்கின்றனர்.
வரும் 31-ஆம் தேதிக்குள் குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால், பொருள்களை வாங்க முடியாது என கூறப்படுவதால் முகாமுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த அலுவலகத்தில் 2 கேமராக்கள், 2 கணினிகள் மூலம் நாளொன்றுக்கு 30 நபர்களுக்கு மட்டுமே புகைப்படம் எடுக்கப்படுகிறது.
இதனால், காலை முதல் அலுவலகத்தில் காத்திருந்தும் புகைப்படம் எடுக்கமுடியாத மக்கள் கடும் வெயிலில் வீடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
இப்பிரச்னையை தீர்க்க கூடுதல் பணியாளர்களை நியமித்து, அதற்கேற்றார்போல் கேமராக்கள், கணினிகள் உள்ளிட்டவற்றிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
