Public accusation

சூர்யா நடித்த புதிய படத்தின் படிப்பிடிப்பு காரணமாக, திருவையாறு காவிரி கரையில் உள்ள ஐயாரப்பர் கோயில் கோபுரங்கள், புஷ்ப மண்டப படித்துறையின் புனித தன்மையை கெடுத்துவிட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் தானா சேர்ந்த கூட்டம். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. 

இந்த படத்தின் சில காட்சிகள் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் அறம் வளர்த்த நாயகி உடனான ஐயாரப்பர் கோயில், காவிரி கரையில் உள்ள புஷ்ப மண்டப படித்துறை ஆகிய இடங்களில் எடுக்கப்பட்டன.

இந்த கோயிலுக்குள் உரிய அனுமதியின்றி படப்பிடிப்பு குழுவினர் நுழைந்ததாகவும், பழைமை வாய்ந்த கோபுரங்கள் மற்றும் படித்துறைகளில் காவி வர்ணத்தைப் பூசியும், புராதாண கட்டடங்களை பாழாக்கிவிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

புஷ்ப மண்டப படித்துறையில் திதி கொடுக்க வந்தவர்களையும், புரோகிதர்களையும், படக்குழுவினர் மிரட்டி அனுப்பியதாகவும், பக்தர்கள் காவிரி நீரில் நீராட அனுமதிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

அது மட்டுமல்லாது, புனிதம் வாய்ந்த புஷ்ப மண்டப படித்துறையில், படப்பிடிப்புக் குழுவினர், மது அருந்தியதாகவும், கோயிலுக்குள் காலணி அணிந்து சென்றதாகவும், ஆற்றில் வண்ணப்பொடிகளை கலந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். காவி வர்ணம் பூசி பாழாக்கிய கோயில் கோபுரங்களையும், படித்துறையும், புனரமைத்து தர வேண்டும் எனவும் பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.