சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த ஜெயப்பிரகாஷ் என்பவரை போலீசார் பொறிவைத்து பிடித்துள்ளனர். இந்த சம்பவம் சென்னை கோட்டூர்புரத்தில் நடந்துள்ளது.

தனியாக செல்லும் பெண்களிடம் தங்க சங்கலி பறிப்பு சம்பவமும், செல்போன் பறித்து செல்லும் சம்பவமும் நடைபெற்று வருகிறது. அதே வேளையில் தனியாக செல்லும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுஅளிக்கும் சம்பவமும் நடந்து வருகிறது. இதனால் பாதிக்கப்படும் பெண்கள், வெளியே தெரிந்தால் அவமானம் என்று கருதி புகார் எதுவும் கொடுக்காமல் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை, கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில், சில பெண்கள், புகார் ஒன்றை கொடுத்துள்ளனர். அதில், சாலையில் நடந்து செல்லும்போது, 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் தங்களைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடிவிடுவதாக கூறியிருந்தனர். அவரது செய்கைகளால் நாங்கள் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று புகாரில் கூறியுள்ளன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதையடுத்து, மயிலாப்பூர் போலீஸ் துணை கமிஷனர் சரவணன், கோட்டூர்புரம் உதவி கமிஷனர் சுதர்சன் ஆகியோர் தலைமையில், மர்ம ஆசாமியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த மர்ம ஆசாமி, கோட்டூர்புரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவரின் பெயர் ஜெயப்பிரகாஷ் (45). இவர் சென்னை விமான நிலையத்தில் கார்கோ பிரிவில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் தகாத வார்த்தையால் பேசியும் கையைப் பிடித்து இழுத்தும் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளது தெரியவந்தது.

போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், பெண்களைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதை அவர் ஒப்புக் கொண்டார். மேலும் தனியாக நடந்து சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு முத்தம் கொடுத்திருப்பதாகவும் கூறினார். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஜெயப்பிரகாஷை பிடிக்க சிசிடிவி கேமரா எங்களுக்கு துருப்புச் சீட்டாக இருந்தது என்றார். கைது செய்யப்பட்டுள்ள ஜெயபிரகாஷ்மீது பெண்களைக்
கிண்டல் செய்வது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டம், போலீசாரை தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம் என்று கூறினார். ஜெயப்பிரகாஷ் கைது செய்யப்பட்டதை அடுத்து கோட்டூர்புரம் பகுதி பெண்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.