திருவாரூர்,

ரூபாய் நோட்டு தடையைக் கண்டித்து போராட்டம் நடத்திய மாணவர்களை அடித்த காவலர்களைக் கண்டித்து திரு.வி.க. கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மோடி அறிவித்தார். இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி நாள்தோறும் பெரும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர். பல இடங்களில் உள்ள ஏ.டி.எம். மையங்கள் செயல்படவில்லை. செயல்படும் ஏ.டி.எம்களில் பணமோ போதுமான அளவு இல்லை.

இதனைக் கண்டித்து சென்னை மேடவாக்கத்தில் உள்ள ஏ.டி.எம். மையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த மாதர் சங்கம், இளைஞர் மற்றும் மாணவர் சங்கங்களின் சார்பில் போராட்டம் நடைப்பெற்றது. அப்போது, பள்ளிக்கரணை காவலாளார்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சரமாரியாக அடித்து தாக்குதலில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவலாளர்களைக் கண்டித்து திருவாரூர் திரு.வி.க. கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்பைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு கல்லூரி கிளை தலைவர் குமார் தலைமை தாங்கினார். இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் பேசினார்.

இதில் மாவட்ட தலைவர் பிரசாத், கிளை செயலாளர் தெட்சிணாமூர்த்தி, நகர செயலாளர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது காவலாளர்களை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.