சென்னை கடற்கரை சந்திப்பில் இருந்து தினமும் 600க்கு மேற்பட்ட மின்சார ரயில்கள் 10 நிமிடத்துக்கு ஒன்று என இயக்கப்படுகின்றன. அதில், செங்கல்பட்டு வரை இயக்கப்படுகின்றன.

இதையொட்டி தினமும் செங்கல்பட்டில் இருந்து மறைமலைநகர், பெருங்களத்தூர், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், கிண்டி, மாம்பலம், எழும்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் வேலைக்காக ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை 8.30 மணிக்கு கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்துக்கு, செங்கல்பட்டில் இருந்து சென்னை நோக்கி மின்சார ரயில் வந்தது. சுமார் 30 நொடிகள் மட்டுமே இந்த ரயில் அங்கு நிறுத்தப்படும். அப்போது, அங்கு நூற்றுக்கு மேற்பட்ட பயணிகள், பிளாட்பாரத்தில் நின்றிருந்தனர்.

ரயில் வந்து நின்றதும், வேலைக்கு செல்லும் அவசரத்தல் முண்டியடித்து கொண்டு ஏறினர். குறிப்பிட்ட நேரம் ஆனதும் ரயில் அங்கிருந்து புறப்பட்டது. இதனால் ரயிலில் ஏறமுடியாமல் பெண்கள் சிலர் கீழே விழுந்து காயடைந்தனர். அதிர்ஷ்டவசமாக அனைவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

இதைதொடர்ந்து சுமார் 15 நிமிடம் கழித்து மற்றொரு ரயில் வந்தது. உடனே அங்கிருந்த பயணிகள், தண்டவாளத்தில் இறங்கி மறியலில் ஈடுபட்டனர். பயணிகள் ஏறுவதற்கு முன்பு எப்படி இயக்கலாம் என கேட்டு கோஷமிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்று, தாம்பரம் ரயில்வே போலீசார், அவர்களை சமரசம் செய்து, அதே ரயிலில் அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால், சுமார் ஒரு மணிநேரம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.