பாடகர் கோவன், நடிகர் விஜய்யின் அரசியல் வருகையை விமர்சித்துப் பாடிய பாடல் தமிழக வெற்றிக் கழக ஆதரவாளர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாடகர் மற்றும் சமூக ஆர்வலரான கோவன், தமிழகத்தில் மதுவிற்கு எதிரான போராட்டங்களில் தனித்த குரலாக அறியப்படுபவர். கலை மக்கள் இலக்கிய கழகத்தைச் சேர்ந்த அவர், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புரட்சிகரமான பாடல்களை இயக்கி, மேடைகளிலும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார். குறிப்பாக மது ஒழிப்பு தொடர்பான அவரது பாடல்கள் பல்வேறு தரப்பினரிடமும் கவனம் பெற்றவை என்று கூறலாம்.

அண்மைக்காலமாக, கோவன் அரசியல் மற்றும் சமூகவியல் சார்ந்த விஷயங்களில் வெளிப்படையாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அந்த வரிசையில், நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் மற்றும் அவரது அரசியல் வருகையை கடுமையாக விமர்சித்து ஒரு பாடலை பாடியிருந்தார். அந்த பாடலில், விஜய் நடித்த ஒரு திரைப்படத்தின் பெயரையும், அவருடைய அரசியல் நிலைப்பாட்டையும் ஒப்பிட்டு கோவன் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இந்த பாடல்களும், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஆதரவாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை உண்டாக்கியது. கோவனின் கருத்துகள் அவமதிப்பாக இருப்பதாகக் கூறி, அவர்கள் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அரசியல் வட்டாரங்களில் சர்ச்சை அதிகரித்துள்ளது.

அந்த நேரத்தில், கோவனின் இந்த பாடல் வீடியோவை திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிரானவர்கள் சமூக ஊடகங்களில் தீவிரமாக பகிர்ந்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், வெனிசுலா அதிபர் கைதை முன்னிட்டு, அமெரிக்காவுக்கு எதிராக பாடகர் கோவன் திருச்சியில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். ஏற்கனேவே கடுப்பான தவெகவினர், கோவனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.