Protest against Sterlite Plant intensifies

தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடக்கும் நூறாவது நாள் எதிர்ப்பு போராட்டத்தின்போது, போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பேரணி நடத்திய போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்த முயன்று முடியாமல் போலீஸார் தப்பி ஓடினர். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். பதிலுக்கு பொதுமக்களும் போலீஸார் மீது கற்களை வீசினர். இதையடுத்து கண்ணீர் புகை குண்டும் வீசப்பட்டது. எதற்கு மசியாத மக்கள் போலீஸாரை ஓடவைத்துவிட்டு தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

போலீசார் நடத்திய இந்த துப்பாக்கி சூட்டில் பலியானவர் பெயர், விவரம் இதுவரை தெரியவில்லை. அதேநேரம், ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள். காவல்துறையினரின் எச்சரிக்கையை மீறி ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.



மாவட்ட கலெக்டர் அங்கே உள்ளாரா என்பது தெரியவில்லை. அவரை சந்திக்க மக்கள் காத்திருக்கிறார்கள். மொத்த தூத்துக்குடி நகரமும் இப்போது பொதுமக்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.