protest against pepsi

தொடங்கியது அடுத்த போராட்டம்…தாமிரபரணியில் பாலூற்றி இளைஞர்கள் களம் இறங்கினர்…

தாமிரபரணியில் இருந்து பெப்சி குளிர்பான நிறுவனத்துக்கு தண்ணீர் எடுக்க விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீக்கியதைக் கண்டித்து ஆற்றில் இறங்கி பாலூற்றி போராட்டத்தைத் இளைஞர்கள் தொடங்கி வைத்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள குளிர்பான ஆலைகளுக்கு தாமிரபரணியில் இருந்து லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்த தடை உத்தரவை நீக்க வேண்டும் என பெப்சி உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்க பெப்சி நிறுவனத்துக்கு அனுமதி அளித்தது.

 இது விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமின்றி இளைஞர்களும் ,மாணவர்களும் உடனடியாக போராட்டத்தில் இறங்கினார்கள்.



நெல்லை கொக்கிரகுளம் பகுதியில், தாமிரபரணி ஆற்றுக்குள் இறங்கி பாலூற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிதண்ணீருக்கே தட்டுப்பாடு நிலவுகிற நிலையில், தாமிர பரணி தண்ணீரை குளிர்பான நிறுவனங்களுக்கு தரக்கூடாது என இளைஞர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இதேபோல் வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் முன்பு தாமிரபரணி ஆற்றுக்குள் இறங்கி ஏராளமானோர் பால் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாமிரபரணி ஆற்றின் கரையில் இருக்கும் சிந்துபூந்துறை, வண்ணார்பேட்டைபகுதியில் கூட தினமும் குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்கள் தினமும் 96 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என அப்பகுதி மக்கள் தெரிவித்தன்ர்.