குடிநீருக்காக தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தில் உள்ள ஓபிஎஸ்க்கு சொந்தமான கிணற்றை வழங்குவதாக கூறிவிட்டு இன்னும் தராமல் ஏமாற்றுவதாக கூறி அந்த கிராமத்து மக்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் இருந்த நிலையில் இன்று நூற்றுக்கணக்கானோர் விளக்கேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ளது லட்சுமிபுரம் கிராமம். இங்கு முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்சின்  மனைவி விஜயலட்சுமி பெயரில் உள்ள நிலத்தில் 200 அடி கிணறு உள்ளது. 

இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய மக்கள், கிணற்றை கிராமத்திற்கு எழுதித்தர கேட்டு தொடர் போராட்டம் நடத்தினர்.  

இதையடுத்து ஓபிஎஸ்சுடன் லட்சுமிபுரம் கிராம மக்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், பிரச்னைக்குரிய 40 ஏக்கர் நிலத்தை கிராம மக்களுக்கே  விற்பனை செய்ய ஓபிஎஸ் ஒப்புக்கொண்டார்.  

இந்நிலையில் அந்த  நிலத்தை விலைக்கு வாங்குவதற்காக கிராமமக்கள் கூட்டம் நடைபெற்றது.  அப்போது, பிரச்னைக்குரிய கிணறு உள்ள இடத்தை ஓபிஎஸ்,  சுப்புராஜ் என்பவருக்கு விற்றுவிட்டதாகவும், அவரிடம் இருந்து கிணற்றை வாங்கிக் கொள்ளவும் லட்சுமி புரம் கிராம மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் இது வரை அதற்கான நடவடிக்கைகளை ஓபிஎஸ் தரப்பிலிருந்து எடுக்கப்படவில் என கூறி லட்சுமிபுரம் மக்கள் நேற்று ஒரு நாள் அடையாள  உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் இன்று லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் உள்ளிட்டோர் கைகளில் விளக்குகளை ஏந்தி ஊர்வலமாகச் சென்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.