Asianet News TamilAsianet News Tamil

சென்னை வானிலை மையம் உரிய முன்னெச்சரிக்கையை வழங்கியது: நிர்மலா சீதாராமன்!

சென்னை வானிலை மையம் உரிய முன்னெச்சரிக்கையை வழங்கியது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்

Proper warning was issued by chennai meteorological department says nirmala sitharaman smp
Author
First Published Dec 22, 2023, 1:49 PM IST

தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் கனமழை பெய்துள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வரும் தமிழக அரசு, வானிலை ஆய்வு மையம் முறையான எச்சரிக்கையை சரியான நேரத்தில் கொடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளது.

தென் மாவட்டங்களில் கன மழை குறித்த எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் தாமதமாக கொடுத்ததாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதேபோல், ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட நேரத்துக்கும் வெள்ளப்பெருக்கு தொடங்கிய நேரத்துக்கும் இடையிலான காலஅவகாசம் மிகவும் குறைவாக இருந்தது என பால்வளத் துறை அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார். அதேபோல், தமிழ்நாடு தலைமை செயலாளர் சிவதாஸ் மீனாவும் இந்திய வானிலை ஆய்வு மைய தரவுகள் சரியாக இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இது போன்ற குற்றச்சாட்டு எழுப்பப்படுவது முதல் முறை அல்ல. ஒக்கி புயலின் போதும், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கருவிகள், தொழில்நுட்பங்கள் துல்லியமாக கணிப்பதில்லை என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில், சென்னை வானிலை மையம் அதிநவீனமானது எனவும் உரிய வானிலை முன்னெச்சரிக்கையை வழங்கியுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், தென் மாவட்டங்களில் பெய்த கனமழை, வெள்ள பாதிப்பு, நிவாரண பணிகளில் மத்திய அரசு என்ன செய்தது என்பது குறித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், “தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று டிசம்பர் 12ஆம் தேதி முதல் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. மழை பாதித்த அன்றும், 3 மணி நேரத்துக்கு ஒரு முறை பதிவு செய்யப்பட்டது. இன்ச் பை இன்ச் எவ்வளவு மழை பெய்யும் என்று சொல்ல முடியாது. கனமழை பெய்யும் என்று ரெட் அலர்ட் கொடுத்த பிறகு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் எடுக்காமல் இருந்தது ஏன்?” என கேள்வி எழுப்பினார்.

“தூத்துக்குடி மாவட்டத்தில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் பெய்துள்ளது. தமிழகத்துக்கு மத்திய அரசு தொடர்ந்து உதவி வருகிறது. வெள்ள பாதிப்பு குறித்து அறிந்தவுடன் உள்துறை அமைச்சரை சந்தித்து உதவி கோரினேன். விமானப்படை மூலம் பலரை மீட்டு எடுத்தோம். வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து சுமார் 42,000 ராணுவ, கடற்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.” எனவும் அவர் தெரிவித்தார்.

அண்ணாமலை, எல்.முருகனுக்கு திடீர் அழைப்பு விடுத்த நிர்மலா சீதாராமன்- ஆலோசனைக்கான காரணம் என்ன.?

மழை, வெள்ள பாதிப்பிலிருந்து தமிழக அரசு என்ன கற்றுக்கொண்டது. மாநில அரசு என்ன செய்துள்ளது என சரமாரியாக கேள்வி எழுப்பிய நிர்மலா சீதாராமன், “பாதிக்கப்ட்ட இடங்களுக்கு அமைச்சர்களும் அதிகாரிகளும் தாமதமாகவே சென்றனர். தென் மாவட்டங்களில் வெள்ளம் வடிவதற்கு முன்பாகவே, பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் இறங்கினர்.  பேரிடர் மீட்புக் குழுவினர் பணியில் இறங்குவதற்கு முன்பு, தமிழக அதிகாரிகள் ஒருவர் கூட அங்கு இல்லை.” என குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த ஆண்டு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய பேரிடர் நிதி ரூ.900 கோடியை மத்திய அரசு முன்கூட்டியே வழங்கிவிட்டது. இந்த ஆண்டில் கொடுக்க வேண்டிய ரூ.900 கோடி தவணையில் இருந்து முதல் தவணையாக ஏப்ரல் மாதம் ரூ.450 கோடியும், இரண்டாவது தவணையாக டிசம்பர் 12ஆம் தேதி ரூ. 450 கோடியும் வழங்கப்பட்டது எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios