சங்கராபுரம் அருகே தடையின்றி குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள், எங்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்கிறோம் என்று உறுதியளித்தால் போராட்டத்தை கைவிடுகிறொம் என்று தெரிவித்தனர்.

சங்கராபுரம் அருகே உள்ள கொசப்பாடி கிராமத்தில் 5000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக அதே பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு மின்மோட்டார் பொருத்தி குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

இதில் வடக்கு தெரு பகுதி மக்களுக்கு சரியான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு கடும் அவதிக்கு உள்ளாகினர்.

இதனால் கோவம் கொண்ட அப்பகுதி மக்கள் நேற்று காலை கொசப்பாடி பேருந்து நிறுத்தம் அருகே திரண்டனர். பின்னர், அங்கேயே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ரேச்சல் கலைச்செல்வி, சங்கராபுரம் காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தராசு மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, “எங்கள் பகுதிக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்கிறோம் எனவும், எங்கள் பகுதியில் பழுதடைந்துள்ள மினிகுடிநீர் தொட்டி மின்மோட்டாரை சரிசெய்து தருகிறோம் என்றும் உறுதியளிக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கேட்டுக் கொண்டனர்.

இதையடுத்து பழுதடைந்த மின்மோட்டாரை சரிசெய்து விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

இதனை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பேருந்து நிறுத்தத்தின் அருகே, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.