ரயில்வே துறையில் வேகமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தனியார்மயமாக்கலில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையமும் சிக்கியுள்ளது. இந்த ரயில் நிலையத்தை 350 கோடி ரூபாய்க்கு ஏலம்விட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் அதிகமான தொழிலாளர்களை கொண்ட பொதுத்துறை நிறுவனமான இந்திய ரெயில்வே துறை கொஞ்சம், கொஞ்சமாக தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது.

ரெயில்வேயில் ஸ்டேசன் மாஸ்டர்கள், கார்டுகள், என்ஜின் டிரைவர்கள் உள்ளிட்ட பணியிடங்களில் மட்டுமே தற்போது நேரடியாக ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ரெயில்வேயின் பிற பிரிவுகளில் உள்ள வேலைவாய்ப்புகள் அனைத்தும் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுவிட்டது.

இந்த நிலையில், ரெயில் நிலையங்களையும்,  தனியாருக்கு கொடுக்க ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்திய ரெயில்வேயில் 7,600 ரெயில் நிலையங்கள் உள்ளன. இதில் 75 ரெயில் நிலையங்கள் அனைத்து வசதிகளுடன் கூடிய ஏ-1 பிரிவை சேர்ந்தது. 332 ரெயில் நிலையங்கள் ஏ பிரிவை சேர்ந்தவை.

தென்னக ரெயில்வேயில் 608 ரெயில் நிலையங்கள் உள்ளன. இதில் 8 ரெயில் நிலையங்கள் ஏ-1 பிரிவிலும், 42 ரெயில் நிலையங்கள் ஏ பிரிவிலும் உள்ளன.

தற்போது 23 ரெயில் நிலையங்கள் தனியார் மயமாக்கப்பட உள்ளன. இதில் தென்னக ரெயில்வேயில் சென்னை சென்டிரல் மற்றும் கோழிக்கோடு ரெயில் நிலையங்கள் தனியாருக்கு கொடுக்கப்பட உள்ளது.

அதன்படி தென்னக ரெயில்வே மண்டலத்தில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் மற்றும்  மூர் மார்க்கெட் வளாகத்தின் தரைத்தளம் ஆகியன ரூ.350 கோடிக்கும் ஏலம் விடப்பட உள்ளன.