பால் நிறுவனங்களின் பெயர்களை குறிப்பிடாத போது வீனாக வழக்கு தொடர்ந்திருப்பதாக ராஜேந்திர பாலாஜி உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.  

தனியார் பால் நிறவனங்களில் வேதியியல் பொருள் கலக்கப்படுவதாக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த மே மாதம் 24 ஆம் தேதி குற்றம் சாட்டியிருந்தார்.

அமைச்சரின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தனியார் பால் நிறுவனங்களான ஹட்சன், டோட்லா மற்றும் விஜய் பால் நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

கலப்பட பால் நிறுவன பெயர்களைக் கூறாமல், பொதுவாக குற்றம் சாட்டியதால் வணிகம் பாதிக்கப்பட்டதாகவும், பொது இடத்தில் யார் பேசினாலும் பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி கேட்கத்தான் செய்வார்கள் எனவும் பால் நிறுவனங்கள்மனுவில் தெரிவித்தன.

மேலும் அமைச்சர் தலா 1 கோடி ரூபாய் தரவேண்டும் என கோரியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆதாரம் இன்றி தனியார் பால் நிறுவனங்கள் குறித்து பேசக் கூடாது என்று அமைச்சருக்கு தடை விதித்திருந்தது.

இந்நிலையில், இதுகுறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பால் நிறுவனங்களின் பெயர்களை குறிப்பிடாத போது வீனாக வழக்கு தொடர்ந்திருப்பதாக ராஜேந்திர பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.