கருமுட்டை விற்பனை விவகாரத்தில் சுதா மருத்துவமனைக்கு ‘சீல்’ வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும் இன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் சிகிச்ச்சைக்கு வரும் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோட்டில் சிறுமியிடம் சட்டவிரோதமாக கருமுட்டை பெற்ற விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சுதா மருத்துவமனைக்கு சீல் வைத்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மருத்துவமனை நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, அரசின் உத்தரவை ரத்து செய்து, மருத்துவமனை தொடர்ந்து செயல்பட உத்தரவிட்டார். மேலும் இது தொடர்பாக மருத்துவமனை தரப்பில் பதில் அளிக்க போதிய அவகாசம் வழங்கி, 12 வாரங்களுக்குள் இறுதி உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, மருத்துவமனையின் சீல் நீக்கப்பட்டு, தொடர்ந்து வழக்கம் போல் செயல்படத் தொடங்கியது.
மேலும் படிக்க:களத்திலேயே துடிதுடித்து இறந்த கபடி வீரர் விமல்ராஜ்! குடும்பத்தாரிடம் 10 லட்சம் நிதியுதவி வழங்கினார் RK சுரேஷ்
இந்த நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட ‘சீலை’ அகற்ற வேண்டும் என்ற தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்தும், மருத்துவமனைக்கு ‘சீல்’ வைத்தது செல்லும் என்றும் தீர்ப்பளித்தது. இதனால் மீண்டும் சுதா மருத்துவமனை செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அங்கு பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி, மருத்துவமனை முன்பு நேற்றிரவு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க:குட் நியூஸ்!! கட்டணமில்லா பயணம்.. இனி கவலை இல்லை.. பெண்களுக்கு நலன் கருதி “பிங்க் நிற பேருந்து”..
இதனிடையே, சுதா மருத்துவமனைக்கு ‘சீல்’ வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய மருத்துவ சங்கத்தின் ஈரோடு கிளை சார்பில் இன்று வேலை நிறுத்தம் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் மாவட்டத்தில் உள்ள 250 மருத்துவமனைகள், 800 மருத்துவர்கள் கலந்துக்கொண்டுள்ளனர். ஈரோட்டில் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தால் இன்று காலை சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
மேலும் படிக்க:நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. கண்ணீருடன் கதறிய பெண் தாசில்தாருக்கு நீதிபதி என்ன தண்டனை வழங்கினார் தெரியுமா?
கடந்த 40 ஆண்டுகளாக சுதா மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. எனவே திடீரென்று மருத்துவமனைக்கு ‘சீல்’ வைத்தால் இங்கு சிகிச்சை பெற்றவர்கள் எங்கு செல்வார்கள்..? என்றும் சுதா மருத்துவமனை பல்துறை மருத்துவமனையாக உள்ள நிலையில், ஒரு பிரிவில் தவறு நடந்ததாக கூறப்படும் நிலையில், ஒட்டுமொத்த மருத்துவமனைக்கும் ‘சீல்’ வைப்பது என்பது ஏற்புடையது அல்ல என்று இந்திய மருத்துவ கழகத்தின் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
