இந்திய சிறைகளில் நடக்கும் நிகழ்வுகளால் அசிங்கப்பட ஆரம்பித்துள்ளது தேசிய சிறைத்துறை நிர்வாகம்!...
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கடும் குற்றவாளிகள் சிலர் கூட  சிறைக்குள் இருந்தபடியே ஜனாதிபதிக்கு ‘கருணை மனு’ அனுப்பி, அது ஏற்றுக் கொள்ளப்பட்டு சாவிலிருந்து தப்பிக்கிறார்கள்.

ஆனால் அதே சிறைக்குள் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்ட சென்சிடீவ் வழக்குகளின் குற்றவாளிகள் அல்லது குற்றவாளிகளாக காட்டப்படுபவர்கள் விரக்தி மிகுதியில் உள்ளேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதும், சிலர் மர்ம மரணத்துக்கு ஆளாவதும் தொடர் கதையாகி இருக்கிறது...

கோவை மாவட்டம் சொலவன்பாளையத்தை சேர்ந்த ஆசிரியையான நிவேதா, அவரது முறையற்ற காதலன் இளையராஜாவால், இன்னொரு முறையற்ற காதலன் கண் முன் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தை தலையிடிக்க வைத்தது.

இந்த வழக்கில் கைதாகி புழல் சிறையிலடைக்கப்பட்டார் இளையராஜா. இந்நிலையில் கடந்த 10_ம் தேதி பிற்பகலில் சிறை கழிப்பறைக்குள் தன் லுங்கியை கட்டி தற்கொலைக்கு முயன்றதாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு எடுத்து வரப்பாட்டார். பரிசோதனை செய்த டாக்டர்கள் ‘இறந்துவிட்டார்’ என்று அறிவித்தனர். 

தவறான உறவு வைத்திருந்தது மட்டுமில்லாமல் அதில் சர்வாதிகாரம் காட்டி, கொலை தண்டனையும் கொடுத்த இளையராஜா இப்படியொரு சாவை தேடுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. 

இது ஒருபுறம் இருக்கட்டும். சிறைக்குள் இப்படி கைதிகளின் சாவுகள் நிகழ்வது ஷாக்கடிக்கிறது. அதிலும் தமிழகத்தை பொறுத்தவரையில் சென்சிடீவ் வழக்குகளின் கைதிகள் இப்படி இறப்பது பேஷனாகிவிட்டது. சுவாதி கொலை வழக்கின் கைதியான ராம்குமார், வொயரை  பிடித்து இழுத்து இறந்தார் (என்றார்கள்.). 

கோவையில் ஒரு முக்கோண காதல் வழக்கில் கொலைப்பழிக்கு ஆளாகி சிறையிலிருந்த ஒரு பெரும் கல்லூரியின் உரிமையாளர் இப்படி சிறைக்குள்ளேயே தூக்கில் இறந்தது அதிர வைத்தது. 

அதேபோல் உலக சமுதாயத்தின் முன் இந்தியாவை வெட்கப்பட வைத்த டில்லி ‘நிர்பயா பாலியல் பலாத்கார’ வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரா ராம் சிங் இப்படித்தான் சிறைக்குள் தற்கொலை செய்து கொண்டார். 

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்!

கைதிகளை கவனிப்பதும், மேய்ப்பதும்தான் தங்களின் கடமை என்று சிறைத்துறை பணிக்கு வந்தவர்கள் அதை செய்யாமல் வேறு எதையெல்லாமோ செய்து கொண்டிருப்பதும், முக்கிய வழக்கின் முக்கிய நபரை உள்ளேயே தீர்த்துக் கட்டிவிட்டால் வழக்கின் போக்கு மாறிவிடும் எனும் நிலையில் அந்த சாவும் சிறைக்குள் சாத்தியப்படுகிறது என்பது நாட்டின் சிறைத்துறை நிர்வாகத்தின் கண்ணியத்தின் மீது விழுந்த சவுக்கடி!