கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அப்துல் பஷீர் என்பவர் திடீர் நெஞ்சுவலி காரணமாக இன்று உயிரிழந்தார்.
கோவையில் கடந்த 1998 ஆண்டு பிப்ரவரி 14 தேதி அன்று பெரிய அளவில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சுமார் 11 இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் 46 பேர் உயிரிழந்தனர்.
இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், இதில் தொடர்புடைய பலரை போலீசார் கைது செய்தனர். இதில் அப்துல் பஷீரும் ஒருவர். கைது செய்யப்பட்டவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அப்துல் பஷீருக்கு, இன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை, சிறைக் காவலர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை சோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலே அப்துல் பஷீர் உயிரிழந்தாக கூறினர். சிறையில் கைதி ஒருவர் உயிரிழந்தது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
