சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அவரது உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறைக்கு சென்ற சில நாட்களில், சசிகலா உள்ளிட்டோர், தங்களுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் இருக்கிறது. எனவே எங்கள் குடும்ப மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளையும், தனியார் மருத்துவமனை சிகிச்சையையும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதை சிறைத்துறை நிராகரித்தது. ஆனாலும், சசிகலாவும் இளவரசியும் மகளிர் சிறையில் ஒரே அறையில் அடைக்கப்பட்டனர்.

சமீபத்தில் இளவரசிக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு சிறைச்சாலை மருத்துவர், தினமும் கண்காணித்து சிகிச்சை அளிக்கிறார். 

இந்நிலையில் தனக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறவும், உடல் பரிசோதனை செய்யவும் அனுமதிக்க வேண்டும் என சிறைத்துறை மருத்துவமனையில் இளவரசி கோரிக்கை விடுத்தார்.

இளவரசியின் உடல்நிலை குறித்து சிறை கண்காணிப்பாளருடன் சிறை மருத்துவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் இதுகுறித்து கர்நாடக சிறைத்துறை டிஐஜி சத்திய நாராயணராவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து டிஐஜி சந்திய நாராயணராவ் கூறியதாவது:- 

இளவரசி திடீர் உடல் நலக்குறைவு அடைந்துள்ளார். ஏற்கனவே அவருக்கு பல பிரச்சனைகள் இருக்கிறது. இதனால், அவர் தினமும் 20 முதல் 25 மாத்திரைகளை சாப்பிடுகிறார்.

சிறையில் உள்ள இளவரசியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற கோரிக்கை விடுத்தார். அதற்கு அனுமதிக்க முடியாது. மற்ற கைதிகளை போல பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

அங்குள்ள மருத்துவர்கள் பரிந்துரை செய்தால், தனியார் மருத்துவமனையில் உடல் பரிசோதனை மட்டும் செய்துகொள்ள அனுமதிக்கப்படும். ஆனால் சிகிச்சை பெற அனுமதிக்க முடியாது. வேண்டுமானால், அவரது வயதையும், உடல் நிலையையும் கருத்தில் கொண்டு கட்டிலில் படுக்க ஏற்பாடு செய்யப்படும்” என்றார்.