ராமேஷ்வரத்தில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் நினைவு மண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். அவர் வருகையால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமுக்கு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் ராமேஸ்வரம் அருகே உள்ள பேய்க்கரும்பு என்ற இடத்தில் 15 கோடி ரூபாய் செலவில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மண்டபத்தை, அப்துல் கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

இதற்காக இன்று காலை 10.30 மணிக்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ராமெஷ்வரம் வரும் மோடி, பின்னர் அங்கிருந்து குண்டு துளைக்காத கார் மூலம் பேய்க்கரும்பு சென்றடைகிறார்.

11 மணியளவில் நினைவு மண்டபத்தை திறந்து வைத்து பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.

அப்போது, அப்துல்கலாமின் சாதனைகள் குறித்த பிரச்சார வாகன பயணத்தையும் மோடி தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், குடியரசுத் துணைத்தலைவர் வேட்பாளர் வெங்கையாநாயுடு உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.