Prime Minister Modi project is Tamil Nadu and Jammu and Kashmir are linked to the Governor of Tamil Nadu.
தஞ்சாவூர்
ஒரே பாரதம் ஒப்பில்லா பாரதம் திட்டத்தால் தமிழ்நாடும், ஜம்மு-காஷ்மீரும் இணைக்கப்படுகிறது என்று தஞ்சாவூரில் நடந்த சலங்கைநாதம் கலைவிழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், தென்னகபண்பாட்டு மையம் சார்பில் சலங்கைநாதம் கலைவிழா தென்னக பண்பாட்டு மைய வளாகத்தில் கடந்த 23-ஆம் தேதி தொடங்கியது.
பத்து நாள்கள் நடந்த இந்த கலைவிழா நாள்தோறும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடந்தது.
இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், மிசோரம், நாகலாந்து, மேகாலயா, அருணாசலபிரதேசம்,
ஜார்கண்ட், மணிப்பூர், உத்தரகாண்ட், சத்தீஷ்கார், அரியானா, அசாம், சிக்கிம், திரிபுரா, காஷ்மீர், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 1200-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கலைவிழாவின் நிறைவு விழா நேற்று நடைப்பெற்றது. இதில், தென்னகபண்பாட்டு மைய இயக்குனர் சஜீத் வரவேற்றார். இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்ருப் பேசினார்.
அப்போது அவர், "இந்தியாவில் ஏழு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மண்டல பண்பாட்டு மையங்கள் நம் கலாசாரவளத்தை மேம்படுத்துவதற்கும், பரவசெய்வதற்கும், பாதுகாப்பதற்கும், பயிற்சிகள், பயிலரங்கங்கள் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
மேலும், மிக அரிதான கலைகளை ஆவணப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டுள்ளன. இந்த மையங்கள் மூலம் நம் நாட்டின் கலாசார பன்முகத்தன்மையை கிராம மக்களிடம் கொண்டு சென்று அவர்களிடையே உள்ள இடைவெளி, மொழியால் இருந்த தடைகள் உடைக்கப்பட்டுள்ளன.
தென்னகபண்பாட்டு மையம் ஏராளமான கலாசார பரிவர்த்தனை நிகழ்ச்சிகளையும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுடைய கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தும் பணியையும் செய்து வருகிறது.
இதேபோல மற்ற மண்டலங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கும் கலைஞர்களை அனுப்புகிறது. இதன்மூலம் மக்களிடையே தங்களுடைய திறனை வெளிப்படுத்துவதற்கு கலைஞர்களுக்கு வாய்ப்பாக அமைகிறது.
தென்னகபண்பாட்டு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள குருசிஷ்யபரம்பரை திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் ஏராளமானோர் பயிற்சி பெற்றுள்ளனர்.
ஒன்றே பாரதம், ஒப்பில்லா பாரதம் என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி உள்ளார். நம் நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமையை கொண்டாடுவதற்கும், அதை நிலைநிறுத்தி வலிமைப்படுத்துவதற்கும் இந்த திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்துள்ளார்.
இந்த திட்டம் அனைத்து மாநிலங்களிடையே ஆழமான, கட்டமைக்கப்பட்ட அமைப்புகள் மூலம் தேசிய ஒருமைப்பாட்டை வளர்ப்பதற்கு உதவும். இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாடும், ஜம்மு-காஷ்மீரும் இணைக்கப்படுகிறது.
இதுதான் கலாசார அடையாளங்களான இசைக்கும், நடனத்துக்கும் சாதி, மத, மொழிகள் ரீதியான தடைகள் கிடையாது. நம் நாகரீகத்தின் மிக உயரிய பாரம்பரிய கலாசாரத்தை பாதுகாப்பதே மத்திய அரசின் நோக்கம்.
இதுபோன்ற நிகழ்ச்சிகளும், கலாச்சார விழாக்களுக்கு உயரிய கலை வடிவங்களை மேம்படுத்துவதற்கும் அவற்றில் இளைஞர்களை ஈடுபட ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது" என்று அவர் கூறினார்.
இந்த விழாவில் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக் கண்ணு, தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன், பரசுராமன் எம்.பி., தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உள்பட பலர் பங்கேற்றனர்.
விழாவில் கலை நிகழ்ச்சியின் நடன ஒருங்கிணைப்பாளர் ஐஸ்வரியாவாரியாருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
