தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்ல் வழக்கறிஞர்கள் ஜி.கிருஷ்ணமூர்த்தி, யானை ராஜேந்திரன், ஜி.எஸ்.மணி ஆகியோர் கடந்த 2001 மற்றும் 2002ம் ஆண்டுகளில் தனித்தனியாக வழக்குகள் தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்களில், ‘நீதிமன்றங்களில் வழக்கு தொடருபவர்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் விதமாக நீதித்துறைக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தரவேண்டும் என்றும், தேவையான ஊழியர்களை நியமிக்கவும் வேண்டும் என்றும், அதற்காக ஆகும் செலவுகளுக்கு, தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என்றும், தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும்’ என கூறப்பட்டு இருந்தது.
இதேபோல, கடந்த 2010 – 2011ம் ஆண்டுகளில் கீழ் நீதிமன்றங்களுக்கு மேஜை, நாற்காலிகள் உள்ளிட்டவைகளை வாங்குவதற்காக ரூ.9.41 கோடி ஒதுக்கவேண்டும் என 2011ம் உயர்நீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்குகள் எல்லாம் தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.மகாதேவன் ஆகியோர் கொண்ட முழு அமர்வில் கடந்த செப்டம்பர் 14ம் தேதி விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்து, உத்தரவிட்டனர்.
அதில், இந்த வழக்குகள் எல்லாம் 14 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளன. ஆனால், நீதித்துறையின் உள்கட்டமைப்பு வசதிகளுக்கும், நீதிமன்றங்கள் செயல்படுவதற்கும் தேவையான நிதியை பெறுவதில் உள்ள சிக்கல் இதுவரை தீரவில்லை.
நிதி பற்றாக்குறையினால், கடந்த அக்டோபர் மாதம் கீழ் நீதிமன்ற நீதிபதிகளுக்கு நடத்தவேண்டிய 2ம் கட்ட பயிற்சி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. மேலும், 2014 – 15, 2015 – 16ம் நிதியாண்டுகளில் மத்திய அரசு ஒதுக்கிய நிதியை தமிழக அரசு பெறத்தவறியதால், அந்த நிதி எல்லாம் மத்திய அரசுக்கு திரும்பி சென்றுவிட்டது.
எனவே, மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதியை பெறுவதற்காக மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகள் கலந்து ஆலோசனை செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்குகள் 3 நீதிபதிகள் கொண்ட முழு அமர்வின் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–
தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவை படித்தோம். ஜனநாயகத்தின் 4 தூண்களில் ஒன்றான நீதித்துறை செயல்படுவதற்கும், நீதித்துறைக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுக்கும் நிதி வழங்காமல் இழுத்தடிப்பது வேதனைக்குறியத. தற்போதுள்ள நிலையின் அடிப்படையில், நீதித்துறைக்கு தேவையான நிதிகளை ஒதுக்குவது என்பது முன்பைவிட படுமோசமாக உள்ளது.
தமிழக ஜூடிசியல் அகடாமிக்கு போதிய நிதியை ஒதுக்காததால், நீதிபதிகளுக்கு நடத்தவேண்டிய 2 பயிற்சி வகுப்புகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சி வகுப்புகளுக்காக ரூ.35 லட்சத்தை ஒதுக்குவது குறித்த பரிந்துரை அரசின் பரிசீலனையின் கீழும், அதிகாரிகளின் ஒப்புதலுக்காகவும் உள்ளன என்று அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுக்கு ரூ.150 கோடி மதிப்பில் 100 பரிந்துரைகளை தமிழக நீதித்துறை அனுப்பியுள்ளது. அவையெல்லாம் அரசிடம் நிலுவையில் ஊள்ளன. முன்னுரிமையின் அடிப்படையில், இந்த 100 பரிந்துரைகளில் 50 பரிந்துரைகளை முதல்கட்டமாகவும், மீதமுள்ள 50 பரிந்துரைகளை 2ம் கட்டமாகவும் பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நாங்கள் ஆலோசனையும் கூறினோம்.
ஆனாலும், தமிழக அரசு இதுவரை பரிசீலிக்கவில்லை. அதிலும் எத்தனை பரிந்துரைகளை பரிசீலித்து, அதை ஏற்று நிதி ஒதுக்கப்படும் என்ற விவரங்களையும் தெரிவிக்கவில்லை. மேலும், மத்திய அரசு ஒதுக்கிய ரூ.150 கோடி நிதியை, தமிழக அரசின் திறமையற்ற மற்றும் இயலாமைத்தனத்தால், அந்த நிதியை பெறக்கூடிய பணிகளை மேற்கொள்ளவில்லை.
அதனால், அந்த நிதி காலாவதியாகி, மத்திய அரசுக்கே அந்த நிதி திரும்பி சென்றுவிட்டது. இதற்கு தமிழக அரசு தான் முழு காரணம். இதனால், 2016 – 17ம் நிதியாண்டில் ரூ.50 கோடியை மட்டும் மத்திய அரசு ஒதுக்கியது. ஆனால், இந்த நிதி போதாது, கூடுதலாக நிதி வேண்டும் என்று மத்திய அரசிடம், தமிழக அரசு இப்போது கோருகிறது.
மாநில நீதித்துறைக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்கும் பொறுப்பும், கடமையும் மாநில அரசுக்கு தான் உள்ளது. இதில், மத்திய அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் நிதியை வழங்கி உதவிக்கரம் மட்டும்தான் நீட்டும்.
தற்போது தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், நீதித்துறைக்கு தேவையான நிதியை உடனடியாக வழங்குவது குறித்து எந்த ஒரு தகவலையும் தெரிவிக்கவில்லை. மேலும், தமிழக அரசு நிதி நெருக்கடியில் உள்ளதா?, பிற துறைகளுக்கு எல்லாம் போதிய நிதிகளை ஒதுக்க முடியாமல் திணறுகிறதா?, நிதி நெருக்கடியில் உள்ளோம் என்று தமிழக அரசு பிரகடனம் செய்யப்போகிறதா? என்பதுதான் எங்களுடைய கேள்வியாகும்.
அப்படி ஒரு சூழ்நிலை நிலவினால், இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 360ன் கீழ் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியைத்தான் அமல்படுத்தவேண்டிய சூழ்நிலை ஏற்படும். மேலும், நிதியை இப்படிதான் கையாளவேண்டும் என்று ஒவ்வொரு மாநில அரசுக்கும், மத்திய அரசு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க முடியும் என்பதை முதலில் மனதில் கொள்ளவேண்டும்.
எனவே, தமிழக அரசு நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது என்று பிரகடனம் செய்யப்போகிறதா? என்பதை தமிழக நிதித்துறை செயலாளர் விரிவான பிரமாண மனுவை தாக்கல் செய்யவேண்டும்.
இந்த வழக்குகளின் விசாரணையை வரும் 30ம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
