முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தினால் அதனை எதிர்கொள்ளத் தயார் என்று அப்போலோ மருத்துவமனை தலைவரும், டாக்டருமான பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார். யாருடைய தலையீடும் இன்றி ஜெயலலிதாவுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.

காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தொடர்ச்சியாக சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் லண்டன் மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில், மாரடைப்பு காரணமாக ஜெயலலிதா, டிசம்பர் 5 ஆம் தேதி மரணமடைந்தார். ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சை கருத்துக்கள் எழுந்தன.

இந்த நிலையில், ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தினால எதிர்கொள்ளத் தயார் என அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.

அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. அப்போது பேசிய டாக்டர் பிரதாப் ரெட்டி, ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தினால், அதனை எதிர்கொள்ளத் தயார் என்றார். 

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும் போது யாருடைய தலையீடு இல்லை என்றும்  இருதய கோளாறு காரணமாகத்தான் அவர் மரணமடைந்ததாகவும் கூறினார்.

சிகிச்சையின்போது ஏதாவது இடையூறு இருந்ததா என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், யாருடைய தலையீடும் இன்றி உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது என்றார்.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் டாக்டர் பிரதாப் ரெட்டி தெரிவித்தார்.