வைகோ சொல்கிற அனைத்து கருத்துக்களுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் தங்களுக்கு கிடையாது என தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கு வருகிற 19ம் இடைதேர்தல் நடைபெற உள்ளது.

இந்த இடைதேர்தலில் அதிமுக திமுக, பாஜக தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. திமுகவும், தேமுதிகவும் பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ள நிலையல், 3 தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்ளவதற்காக தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா, திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார்.

அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தங்களுடன் கூட்டணி வேண்டும் என்று தேடி வந்ததும் வைகோ தான், தற்போது விமர்சிப்பதும் அவர்தான்’ ஆகையால் இதுபற்றி அவர்தான் சொல்ல வேண்டும். இதைப்பற்றி சொல்வதற்கு வேறொன்றும் இல்லை என்று தெரிவித்தார்.

மேலும், உணர்ச்சிவசப்பட்டு ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கருத்தை கூறக்கூடியவர் வைகோ. அவர் சொல்கிற அனைத்து கருத்துக்களுக்கும் நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.