2026ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரும் தேர்தலில் விஜய் உடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.

கரூரில் தனியார் விடுதியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தேர்தலில் தனித்து போட்டியிடும் பழக்கத்தை உருவாக்கியது கேப்டன் தான். இதுவரை எந்த கட்சியும் தனித்து நிற்கவில்லை தற்போது சீமான் தனித்து நிற்கிறார். விஜய் அவருடைய நிலைப்பாட்டை கூறவில்லை. இனி தேமுதிக தனித்து நிற்பதை காலம் தான் முடிவு செய்யும். 2026 தேர்தலில் தேமுதிக வெற்றி பெற்று மிகப் பெரிய பலத்தோடு சட்டசபைக்கு செல்லும் என்பது எங்களுடைய எண்ணம்.

தேமுதிக 234 தொகுதிகளிலும் போட்டியிட்டதை தற்போது நடைபெற்ற தேர்தலோடு ஒப்பிடக்கூடாது. குறிப்பாக 40 தொகுதிகளில் போட்டியிட்டதற்கும், 4 தொகுதியில் போட்டியிட்டதையும் ஒப்பிடக்கூடாது. ஆண்ட கட்சிக்கும் ஆளும் கட்சிக்கும் நாங்கள் நிகராக தான் உள்ளோம் எங்கள் வாக்கும் நிகராக தான் உள்ளது. 234 தொகுதிகளுக்கும் மண்டல, மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் உடன் இணைந்து நான்கு நாட்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

விஜய் கட்சி உடன் கூட்டணி இருக்கிறதா என்ற கேள்விக்கு விஜய் தான் சொல்ல வேண்டும். நாங்கள் கட்சி தொடங்கி 20 வருடம் ஆகிறது. அரசியல் ஆதாயம் என்பது தேர்தல் நோக்கி தான் நகர்கிறது. எங்களுடைய நகர்வும் இனிய அரசியலை நோக்கி தேர்தல் கண்ணோட்டத்தில் இருக்கும். 2026ல் ராஜ்யசபா சீட்டு வழங்கப்படும் என அதிமுக உறுதியாக கூறியுள்ளது. அதனைப் பொறுத்திருந்து பார்ப்போம் பொறுத்தார் பூமி ஆழ்வார்.

கூட்டணி ஆட்சி அமைந்தால் நல்லது தான். அப்பொழுது தான் தவறுகள் நடந்தால் சுட்டிக் காட்ட முடியும். கூட்டணி ஆட்சி 2026-ல் சாத்தியம். கரூர் மாவட்டத்தில் அதிக மணல் கொள்ளை, 24 மணி நேரமும் மது விற்பனை, லாட்டரி சீட்டு விற்பனை அதிகளவு நடைபெற்று வருகிறது. தற்போது உள்ள ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து உள்ளது என்று கூறினார்.