வரதட்சணையின்போது கூறப்பட்ட மோட்டார் சைக்கிள் கொடுக்காததை அடுத்து, கர்ப்பிணி மனைவியை கணவன் அடித்து கொன்ற சம்பவம் தஞ்சையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம் மானம்புசாவடி, மேட்டு எல்லையம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர். இவர் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி காயத்ரி. இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஏற்கனவே குழந்தை உள்ள நிலையில் இரண்டாவது முறையாக காயத்ரி கர்ப்பம் தரித்துள்ளார். 

திருமணத்தின்போது, காயத்ரி வீட்டில் இருந்து சீர்வரிசையாக மோட்டார் சைக்கிள் வாங்கித் தருவதாக கூறியிருந்தனர். திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆன பிறகும், அவர்கள் மோட்டார் சைக்கிள் வாங்கித் தரவில்லை என்று கூறப்படுகிறது.

மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுக்காததால், சுந்தரத்துக்கும் காயத்ரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. வீடு கட்டுவதற்கு, உங்கள் வீட்டில் இருந்து பணம் வாங்கி வா என்று காயத்ரியிடம் சுந்தரம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு இருவருக்கிடையேயும், வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், சுந்தரம் மனைவி காயதியின் தலையைப் பிடித்து சுவரில் தள்ளி உள்ளார். 

சுவற்றில் மோதிய காயத்ரி பலத்த காயமடைந்தார். இதனை அடுத்து, அருகில் இருந்தோர், காயத்ரியை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், காயத்ரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சுந்தரத்தைக் கைது செய்து, காயத்ரியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பைக் வாங்கி கொடுக்காததால், கர்ப்பிணி மனைவியை கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் தஞ்சையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.