Prasanna and Sneha helped 10 poor farmers through Friends Of Farmers

1960 களில் தமிழகத்தில் நிலவிய கடும் உணவு பஞ்சம், காங்கிரஸ் ஆட்சியை வேரோடு சாய்த்து, இன்றுவரை ஆட்சிக்கு வரமுடியாமல் செய்து விட்டது.

அப்போது நிலவிய உணவு பஞ்சத்தில், விவசாயிகள் எலிக்கறியை தின்றெல்லாம் வாழ்ந்தார்கள் என்று சொல்லப்படுவதுண்டு. அந்த அளவுக்கு மக்களை வாட்டி எடுத்த பஞ்சம் அது.

ஆனால், அதன் பிறகு உருவாக்கிய பசுமை புரட்சி திட்டங்கள், இன்று உணவு பஞ்சத்தை அகற்றி விட்டது. ஆனால் மத்திய மாநில அரசுகளின் அலட்சிய போக்கு, உலகிற்கே சோறு போடும் உழவர்களை எல்லாம் கடன்காரர்களாக ஆக்கி நடுத்தெருவுக்கு கொண்டு வந்து நிறுத்தி விட்டது.

அன்று உணவு பஞ்சம் நிலவியபோது, காஞ்சி பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள், பிடி அரிசி திட்டம் என்று ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

அதன் படி, கொஞ்சம் வசதியான மற்றும் நடுத்தர குடும்பங்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு நாளும், ஒரு கைப்பிடி அளவுக்கு அரிசியை எடுத்து சேர்த்து வைக்க வேண்டும்.

குறிப்பிட்ட அளவுக்கு சேர்ந்த பின்னர், உணவு பஞ்சத்தால் தவிக்கும் ஏழைகளுக்கு அதை வழங்கவேண்டும் என்பதே அந்த திட்டமாகும். அந்த திட்டத்தை பலரும் பின்பற்ற ஆரம்பித்தனர்.

பரபரப்பான குமுதம் வார இதழ், அப்போதைய பிரபலமான நடிகை சவுகார் ஜானகி, கையில் ஒரு பிடி அரிசியை பானையில் போடுவது போல படம்பிடித்து வெளியிட்டதாக சிலர் நினைவு கூறுகின்றனர்.

ஆனால், அந்த நிலை இன்று வேறு வடிவத்திற்கு மாறி இருக்கிறது. உழுபவன் கணக்கு உழக்கு கூலி கூட மிஞ்சாது என்ற பழமொழி போல, உலகத்திற்கே, உணவு வழங்கும் உழவர்கள் இன்று பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கடும் வறட்சியால், விவசாயம் பொய்த்து, வாடிய பயிரை கண்டு வாடியும், கடன் தொல்லையால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர்.

அவர்கள், தங்கள் நிலையை வெளிப்படுத்த, எத்தனையோ விதங்களில் போராட்டம் நடத்தியும், பிரதமர் அவர்களை திரும்பி கூட பார்க்கவில்லை.

இந்நிலையில், தற்போது பெரிய அளவில் மார்க்கெட் இல்லாத நடிகர் பிரசன்ன-சினேகா தம்பதிகள், ஏதோ எங்களால் முடிந்த உதவி என்று 2 லட்ச ரூபாய் கொடுத்திருப்பது, மிகவும் பாராட்டுக் கூறியது என்றே சொல்ல வேண்டும்.

கடந்த 2015 ம் ஆண்டு, கடும் வெள்ள சேதத்தால் சென்னை உள்ளிட்ட பல மாவட்ட மக்கள் சிக்கி தவித்த போது, திரையுலகை சேர்ந்தவர்கள் செய்த உதவியை மறுப்பதற்கில்லை.

தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த ஸ்ரீ திவ்யா கூட 5 லட்ச ரூபாய் நிவாரண நிதியாக கொடுத்தார். ஒரு துளி வியர்வைக்கு, ஒரு பவுன் தங்க காசு சம்பாதித்தவர்கள் எல்லாம் என்ன கொடுத்தார்கள்? என்பது இதுவரையில் கூட தெரியவில்லை.

இது ஒரு புறம் இருக்கட்டும், தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவற்றை தூர் வாரி, கரைகளை வலுப்படுத்தினாலே, தண்ணீர் பிரச்சினையும் தீரும், வெள்ள சேதமும் தவிர்க்கப்படும்.

இதை செய்வதற்கு மத்திய மாநில அரசுகள் ஏன் தயக்கம் காட்டுகின்றன என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது. 

உழவன், மற்றவர்களுக்கு பாடியளந்து பழக்கப்பட்டவன். அவனை பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாக்கினால், நாமும் பிச்சை எடுப்பதற்கு தயாராகி வருகிறோம் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே உண்மை.