தூத்துக்குடி அனல் மின் நிலைய முதல் யூனிட்டில் நேற்று திடீரென பாய்லரில் ஏற்பட்ட பழுதால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் மொத்தம் 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. 1979ம் ஆண்டு அமைக்கப்பட்ட பழமை வாய்ந்த இந்த மின் யூனிட்டுகள் அடிக்கடி பழுதடைகின்றன.
இந்நிலையில், நேற்று காலை இங்குள்ள முதல் யூனிட் கொதிகலனில் திடீரென ஏற்பட்ட பழுதால் அதில் மின் உற்பத்தி தடைபட்டது. இதனால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த யூனிட்டை சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், அனல்மின் நிலையத்தில் பயன்படுத்தும் உபகரணங்கள் பழையதாகவே உள்ளது. அதில் ஏற்பட்டுள்ள பழுதை சீரமைத்தபின்னர் மீண்டும் பழுது ஏற்படுகிறது. இதனால், அடிக்கடி உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற இயந்திரங்களை அப்புறப்படுத்திவிட்டு, புதிதாக நவீன முறையில் உள்ள இயந்திரங்களை பொருத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால், எவ்வித நடவடிக்கையும் இல்லை என்றனர்.
