Asianet News TamilAsianet News Tamil

தீக்குச்சி ஆலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு; 48 ஆலைகளின் தொழிலாளர்கள் மின்வாரிய அலுவலகம் முற்றுகை...

Power connectivity to firecracker plants 48 Factory Workers Electrical Power Station Siege ...
Power connectivity to firecracker plants 48 Factory Workers Electrical Power Station Siege ...
Author
First Published Dec 21, 2017, 9:22 AM IST


தூத்துக்குடி

தூத்துக்குடியில் வனத்துறையின் அனுமதியின்றி செயல்படும் 48 தீக்குச்சி ஆலைகளின் மின் இணைப்பைத் துண்டித்ததால் மின்வாரிய அதிகாரிகளைக் கண்டித்து அந்த ஆலைகளின் தொழிலாளர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வனத்துறையின் முறையான அனுமதியின்றி தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செயல்படும் தீக்குச்சி ஆலைகளை மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒருவர் வழக்கு தொடுத்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம்,  "அனுமதி பெறாமல் இயங்கி வரும் தீக்குச்சி ஆலைகளின் மின் இணைப்பை துண்டியுங்கள்" என்றது.

அதன்படி, கோவில்பட்டி மின்வாரிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஆலைகளுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.  எனினும், எந்தவித அனுமதியும் பெறாததால் நேற்று குறிப்பிட்ட ஆலைகளுக்குச் சென்று மின் இணைப்பை துண்டித்தனர் மின்வாரிய ஊழியர்கள்.  மொத்தம் 48 தீக்குச்சி ஆலைகளின் மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டது.

இதனையடுத்து,  ஆலைத் தொழிலாளர்கள் மற்றும் நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள்,  நேஷனல் தீக்குச்சி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கோவில்பட்டி மின்வாரிய அலுவலக வளாகத்தில் திரண்டு அங்கேயே உட்கார்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இதுகுறித்து தகவலறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெபராஜ்,  மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் விநாயகம்,  உதவி மின் கோட்ட பொறியாளர்கள் சண்முகசுந்தரம், குருசாமி,   உதவிப் பொறியாளர்கள் மிகாவேல்,  நாகராஜ்,  சங்க நிர்வாகிகள் சேதுரத்தினம்,  பரமசிவம்,  ஜவ்வாது ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது,  "நீதிமன்றத்தை அணுகி இதற்கு தீர்வு காண வேண்டுமே தவிர, போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்" என அறிவுறுத்தினர்.

அதனையேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்துச் சென்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios